அதிமுக ஆட்சியில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெயரில் ரூ.2.75 கோடி மோசடி: வேளாண் அலுவலர், விஏஓ மீது நாகை லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு

நாகப்பட்டினம்: கடந்த அதிமுக ஆட்சியில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெயரில் போலி பட்டியல் தயார் செய்து ரூ.2 கோடியே 75 லட்சம் மோசடி செய்த விஏஓ, உதவி வேளாண் அலுவலர் மீது நாகப்பட்டினம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா நாலுவேதபதி கவுண்டர் தெருவை சேர்ந்தவர் அட்சயகுமார். இவர், கடந்த 2019 செப்டம்பர் 19ம் தேதி சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குநர் அலுவலகத்திற்கு புகார் மனு அனுப்பியிருந்தார்.

அதில், ‘2018 நவம்பர் 16ம் தேதி அதிகாலை வீசிய கஜா புயலில் ஏராளமான சேதம் ஏற்பட்டது. இதில் தென்னை மரங்களும் சேதம் அடைந்து இருந்தது. சேதம் அடைந்த தென்னை மரங்களுக்கு நிவாரணம் வழங்க அதிமுக அரசு உத்தரவிட்டது. இதை பயன்படுத்தி நாலுவேதபதி விஏஓ சத்தியவான், கோவில்பத்து வேளாண் உதவி அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் போலியாக ஆவணங்கள் தயார் செய்து முறைகேடு செய்துள்ளனர்’ என குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து மனு மீது விசாரணை நடத்த 2022ல் நாகப்பட்டினம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம்  அனுமதி பெற்று விசாரணை நடத்தினர். இதில், விஏஓ சத்தியவான் கடந்த 2018 மார்ச் 23ம் தேதி முதல் 2019 டிசம்பர் 9ம் தேதி வரை வேதாரண்யம் தாலுகா நாலுவேதபதி கிராமத்தில் விஏஓவாக பணியாற்றி வந்ததும், இவர் தற்போது வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு மூன்றாம் சேத்தி கிராமத்தில் விஏஓவாக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது. அதே போல் ரவிச்சந்திரன், 2016 பிப்ரவரி 20ம் தேதி முதல் 2019 ஜூன் 30 வரை வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு வட்டாரம் கோவில்பத்து வேளாண் உதவி அலுவலராக பணிபுரிந்தார்.

தற்போது தலைஞாயிறு வட்டாரம் நீர்முளை உதவி வேளாண் அலுவலராக பணியாற்றி வந்ததும், 2 பேரும் இணைந்து கஜா புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக போலியாக நிவாரண பட்டியல் தயார் செய்து ரூ.1 கோடியே 27 லட்சத்து 57 ஆயிரத்து 400 மோசடி செய்ததும், போலியாக சர்வே எண்கள் மற்றும் சாகுபடி செய்யாத விவசாயிகள் பெயர் பட்டியல் தயார் செய்து மொத்தமாக ரூ.2 கோடியே 75 லட்சம் மோசடி செய்ததும் தெரிய வந்தது. இதுதொடர்பாக விஏஓ சத்தியவான், வேளாண் உதவி அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் மீது நாகப்பட்டினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: