போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற 88 ஆயிரத்திற்கும் கூடுதலான தொழிலாளர்களுக்கு 2015ம் ஆண்டில் நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு இன்று வரை வழங்கப்பட வில்லை. போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு வழங்கப்படும்  ஓய்வூதியத்தின் மீதான அகவிலைப்படி உயர்வு கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் காரணமின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஓய்வூதியர்களின்  சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்று தீர்ப்பு  அளித்துள்ளன. ஆனால், அந்த ஆணையை செயல்படுத்தாத தமிழக அரசு, அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கிறது. தமிழக அரசு நினைத்தால், போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களின் அகவிலைப்படியை உடனடியாக உயர்த்த முடியும். எனவே, அகவிலைப்படியை உடனடியாக உயர்த்தி, நிலுவைத் தொகையுடன் சேர்த்து தமிழக அரசு வழங்க வேண்டும். இது குறித்து உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டை திரும்பப் பெற வேண்டும்.

Related Stories: