‘யானைங்க வெறும் யானை கிடையாது; மொத்த பாசத்தோட உருவம்’ தாயை பிரிந்த குட்டி யானைகளுக்கு வளர்ப்பு தாயாக வாழ்ந்தேன்: பொம்மன் மனைவி பெள்ளி நெகிழ்ச்சி பேட்டி

ஊட்டி: ‘‘யானைங்க வெறும் யானை கிடையாது. அது மொத்த பாசத்தோட உருவம். தாயை பிரிந்து வாடிய குட்டி யானைகளுக்கு வளர்ப்புத்தாயாக வாழ்ந்தேன்,’’ என பொம்மனின் மனைவி பெள்ளி கூறினார். நீலகிரி மாவட்டம், தெப்பக்காட்டில் ஆசியாவின் பெரிய வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. வனங்களில் தாயை பிரிந்து மீட்கப்படும் யானை குட்டிகள், குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து தொந்தரவு செய்யும் காட்டு யானைகள் போன்றவை பிடிக்கப்பட்டு இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது இங்கு 23 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளை பழங்குடியினத்தை சேர்ந்த பாகன்கள் பராமரித்து வருகின்றனர்.

கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் தாயிடமிருந்து பிரிந்த 3 மாத ஆண் குட்டி யானையை நாய்கள் கடித்து குதறியதில் வால் உட்பட உடல் முழுவதும் காயத்துடன் சுற்றி திரிந்த நிலையில் மீட்கப்பட்டது. உடலில் காயங்கள் இருந்ததால், உயிர் பிழைப்பது கஷ்டம் என கூறப்பட்டது. இந்த நிலையில், தெப்பக்காடு முகாமை சேர்ந்த பழங்குடியின பாகன் பொம்மன் தேன்கனிக்கோட்டை சென்று காயமடைந்த யானையை பார்த்து அங்கேயே தங்கி அதனை பராமரிக்கும் பணியை மேற்கொண்டுள்ளார்.

யானை குட்டியின் உடல் நலம் சற்று தேறிய நிலையில், அதனை முதுமலை தெப்பக்காடு முகாமிற்கு கொண்டு வந்து ரகு என பெயர் சூட்டப்பட்டது. பின்னர் அங்குள்ள கரோலில் (பிடிபட்ட காட்டு யானைகளை அடைத்து வைக்க பயன்படும் மரக்கூண்டு) அமைத்து பொம்மனும், அவரது மனைவி பெள்ளியும் 24 மணி நேரமும் தங்கி அக்கறையுடன் பார்த்து கொண்டனர். இந்த சமயத்தில் 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சத்தியமங்கலம் பகுதியில் தாயை பிரிந்த நிலையில் பெண் யானை குட்டி தெப்பக்காடு முகாமிற்கு கொண்டு வரப்பட்டது.

அதற்கு பொம்மி (அம்மு) என பெயரிடப்பட்ட நிலையில், அதனை பராமரிக்கும் பணியையும் பொம்மன், பெள்ளியிடம் வனத்துறையினர் ஒப்படைத்தனர். தாயை பிரிந்த குட்டி யானைகளை பராமரித்த முதுமலையை சேர்ந்த பழங்குடியின தம்பதியின் அனுபவங்களை எடுத்த ஆவண படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பதை தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான மீடியாக்கள் முதுமலையில் முகாமிட்டு பொம்மி யானையை பராமரித்த பெள்ளியிடம் அனுபவங்களை பதிவு செய்து வருகின்றனர்.

யானை பராமரிப்புக்காக பொம்மன் கிருஷ்ணகிரி சென்றுள்ளார். குட்டி யானைகளுக்கு வளர்ப்புத்தாயாக வாழ்ந்த அனுபவம் குறித்து பெள்ளி நெகிழ்ச்சியுடன் அளித்த பேட்டி: குட்டி யானை ரகுவை கூட்டிட்டு வரும்போதுதான் முதல் முறையாக யானையை கவனிக்கிற வேலைக்கு போனேன். ஆரம்பத்துல கொஞ்சம் பயம் இருந்தது. அப்புறம் எந்த பயமும் இல்லை. நீங்க நினைக்கிற மாதிரி யானைங்க வெறும் யானை கிடையாது. மொத்த பாசத்தோட உருவம். நீங்க பாசம் வைத்து பழகினால், பதிலுக்கு ஆயிரம் மடங்கு பாசத்தை நம் மீது பொழியும். ரகுவையும், பொம்மியையும் பெத்த புள்ளைங்களைவிட ஒருபடி மேல வச்சி பாத்துக்கிட்டோம்.

மடியில படுக்க வெச்சு பாலூட்டியிருக்கிறோம். வயித்துப்போக்கு, வாந்தி எடுத்தாலும் எந்த சங்கடமும் இல்லாமல் கட்டுன சீலையில துடைச்சு சுத்தம் பண்ணுவேன். சுடு தண்ணீர் வைத்துதான் குளிக்க வைப்போம். தாய் இல்லாமல் ஒரு குட்டி யானை இருக்குன்னு தெரிஞ்சா முதல் தகவல் என் கணவர் பொம்மனுக்குதான் வரும். எதைப்பத்தியும் யோசிக்காமல் எந்த நேரமா இருந்தாலும் உடனே கிளம்பி விடுவார். ரகுவை காப்பாத்த நாங்க பட்ட பாட்டை, சொல்லவே முடியாது.

அதேபோலதான், குட்டி யானை அம்முவையும் கொண்டு வந்தாங்க. ரொம்ப சின்ன குட்டி. யானைக்கான நிறமே கூடல இளஞ்சிவப்பு நிறத்துலதான் இருந்தது. எப்படிடா காப்பாத்த போறோம்னு கலங்கிட்டோம். வனத்துறையில் எனக்கு கொடுத்த சம்பள காசுல பால், பழம்ன்னு வாங்கி கொடுத்து காப்பாத்துனோம். ஒரு நொடி விலகி போக முடியாது. கத்தி கதறி ஊரையே கூட்டிரும். வனத்துறையில் எல்லா வசதியும் செஞ்சி கொடுத்தாங்க. எப்படியோ ரெண்டையும் காப்பாற்றி ஆளாக்கிட்டோம். தாய் இல்லாமல் இருக்கிற குட்டிகளை பார்த்தாலே மனசு கஷ்டமா இருக்கும். எங்களின் அனுபவத்தை படமாக எடுத்தனர். தற்போது அதற்கு விருது கிடைத்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு பெள்ளி கூறினார்.

Related Stories: