ஆஸ்கர் வென்ற 'நாட்டு நாட்டு'பாடல்: ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தி உள்ளது என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, கவிஞர் வைரமுத்து வாழ்த்து..!!

டெல்லி: அமெரிக்காவில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விழாவில், சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடலுக்கு விருது வழங்கப்பட்டது. ஆஸ்கர் விருதை நாட்டு நாட்டு பாடலை எழுதிய சந்திரபோஸ், இசையமைத்த கீரவாணி பெற்றுக் கொண்டனர். நாட்டு நாட்டு பாடலுக்கு மேடையில் கலைஞர்களின் நடன நிகழ்ச்சி இடம்பெற்றது. கால பைரவா, ராகுல் சிப்லிகஞ்ச் நாட்டு நாட்டு பாடலை பாட, கலைஞர்கள் நடனம் ஆடினர். நாட்டு நாட்டு பாடலுக்கு கலைஞர்கள் ஆடியதற்கு விழாவில் இருந்தவர்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர்.

இதேபோல் நீலகிரி தம்பதியை பற்றிய, கார்த்திக்கி கொன்சல்வேஸ் இயக்கியுள்ள The Elephant Whisperers என்ற ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. ஆஸ்கர் விருதினை கார்த்திக்கி, குனித் மொங்கா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். முதுமலையில் உள்ள பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி குறித்த ஆவண குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றது. இந்நிலையில், கவிஞர் வைரமுத்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

2 ஆஸ்கர் விருதுகள்: குடியரசுத் தலைவர் வாழ்த்து

ஆஸ்கர் விருதுகளை வென்ற RRR, The Elephant Whisperers படக்குழுவினருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டு நாட்டு பாடல் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தி உள்ளது எனவும் குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து: மரகதமணி என்ற கீரவாணி ஆஸ்கர் விருதை வென்றது தமிழுக்கு கிடைத்த பெருமை என கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு கிடைத்த மகுடத்தை ஒவ்வொரு இந்தியரும் அணிந்து கொள்ளலாம் என வைரமுத்து கூறியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின்  நாட்டு நாட்டு பாடலுக்காக சிறந்த மூலப்பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்ற இசையமைப்பாளர் கொடுரி மரகதமணி கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.  அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதுமலையில் ஆதரவற்ற யானைக்குட்டிகளை பராமரித்து வரும் பொம்மன்-பெள்ளி இணையர் குறித்த தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்  என்ற ஆவண குறும்படத்திற்கும் ஆஸ்கர் விருது கிடைத்திருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.

அப்படத்தின் இயக்குனர் கார்த்திகி, தயாரிப்பாளர் குனீத் மோங்க ஆகியோருக்கு வாழ்த்துகள். ஆதரவற்ற யானைக்குட்டிகளை பராமரிப்பதில் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டுள்ள  பொம்மன் - பெள்ளி இணையரின் தியாகம் போற்றத்தக்கது.  இப்போதும் கூட தருமபுரியில் அண்மையில் இறந்த 3 யானைகளின் குட்டிகளை தேடும் பணியில் பொம்மன் ஈடுபட்டுள்ளார். அவர்களுக்கு பாராட்டுகள் என அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: