பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டுக்கு வெளியூரில் இருந்து வாழைத்தார் வரத்து குறைவால் விலை தொடர்ந்து அதிகரிப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாரந்தோறும் நடைபெறும் வாழைத்தார் ஏலத்தின்போது, சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி ஈரோடு, கரூர், திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டு, தரத்திற்கேற்ப, விலை நிர்ணயம் செய்யப்பட்டு எடை மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த  டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் கடும் பனிப்பொழிவால், வாழைத்தார் அறுவடை பாதிக்கப்பட்டு, மார்க்கெட்டுக்கு அதன் வரத்து  குறைவானது. வரத்து குறைவால் பெரும்பாலான வாழைத்தார்கள் கூடுதல் விலைக்கே விற்பனையானது. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், பல்வேறு பகுதிகளில் வாழைத்தார் அறுவடை அதிகமானது. கடந்த சில வாரமாக, ஈரோடு மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் இருந்து நேந்திரன் வரத்து அதிகமாக இருந்தது. ஆனால் நேற்று நடந்த சந்தையில், வெளியூர்களிலிருந்து வாழைத்தார் வரத்து மிகவும் குறைவாக இருந்தது.  

வாழைத்தார் வரத்து குறைவால், உடனுக்குடன் எடை மூலம் விற்பனையானது. அதிலும் பெரும்பகுதி கேரள வியாபாரிகள் அதிகம் வாங்கி சென்றதால், இந்த வாரத்திலும் கூடுதல் விலைக்கு விற்பனையானது. இதில், செவ்வாழை தார் 1 கிலோ ரூ.52 வரையிலும், பூவந்தார் 1 கிலோ ரூ.38க்கும், மோரீஸ் 1 கிலோ ரூ.36க்கும்,  கற்பூரவள்ளி 1 கிலோ ரூ.42க்கும், கேரள ரஸ்தாளி 1 கிலோ ரூ.42க்கும், நேந்திரன் 1 கிலோ ரூ.38க்கும் விலை நிர்ணயிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: