பிளஸ்2 பொதுத்தேர்வு இன்று தொடக்கம் நெல்லை தேர்வு மையங்களில் கிருமிநாசினி தெளிப்பு-மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

நெல்லை : பிளஸ்2 பொதுத்தேர்வு இன்று தொடங்க உள்ள நிலையில் தேர்வு  மையங்களில் மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவுப்படி  கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது. தமிழகத்தில்  நடப்பு கல்வியாண்டிற்கான பிளஸ்2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இதை  முன்னிட்டு கல்வித்துறை, அரசு தேர்வுத்துறை தேர்வு ஏற்பாடுகளை செய்து தயார்  நிலையில் உள்ளது. முதல் நாளான இன்று மொழிப்பாடத்திற்கான தேர்வு  நடைபெறுகிறது.

நெல்லை மாவட்டத்தில் 184  பள்ளிகளைச் சேர்ந்த 21 ஆயிரத்து 754 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.  இதற்காக 69 தேர்வு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும்  மத்திய சிறை உள்ளிட்ட தனித்தேர்வர்களுக்காக 4 மையங்கள் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளன. தேர்வை முன்னிட்டு  தேர்வுக்கூட அறைகளில் மாணவர்களின் பதிவு எண் எழுதி ஒட்டுதல், அறிவிப்பு  பேனர் வைப்பது போன்ற பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. மேலும் நெல்லை மாநகர பகுதியில் உள்ள அனைத்து தேர்வு மையங்களில் மாநகராட்சி  ஆணையர் சிவ கிருஷ்ண மூர்த்தி உத்தரவுப்படி சுத்தம் செய்து கிருமிநாசினி  மருந்து தெளிக்கப்பட்டது.

 நெல்லை டவுன்  மண்டலத்திற்குட்பட்ட கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுகாதார அலுவலர்  இளங்கோ மேற்பார்வையில் தேர்வு அறைகள் மற்றும் வளாகத்தை  சுகாதாரப்பணியாளர்கள் சுத்தம் செய்து கிருமிநாசினி மருந்து தெளித்தனர்.   தேர்வுப்பணியில் நெல்லை மாவட்டத்தில் 1500க்கும் மேற்பட்ட அனுபவம் மிக்க  ஆசிரியர்கள் ஈடுபடஉள்ளனர்.

இன்று காலை  வினாத்தாள் கட்டுகள் உள்ள காப்பு மையங்களில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன்  வினாத்தாள்கள் வழித்தட அலுவலர்கள் மூலம் வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டு  தேர்வு மையங்களுக்கு வழங்கப்படும். நெல்லை, சேரன்மகாதேவி, வள்ளியூரில்  வினாத்தாள் காப்பு மையங்களில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது.

மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்கவும் தேர்வை கண்காணிக்கவும் பறக்கும்  படையினர், நிற்கும் படையினர், கண்காணிப்பு அலுவலர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர். மாற்றத்திறனாளிகள்  தேர்வு எழுதவும் சிறப்பு ஸ்கிரைப் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கலெக்டர் கார்த்திகேயன், தேர்வுத்துறை இணை இயக்குனர் ராமசாமி, மாவட்ட  முதன்மைக்கல்வி அலுவலர் திருப்பதி ஆகியோர் தேர்வு மையங்களில் இன்று ஆய்வு  செய்ய உள்ளனர். தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: