பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சென்னை கல்லூரி முதல்வர் மீது தினமும் குவியும் மாணவிகளின் புகார்கள்: ஆபாச வீடியோக்கள், எஸ்எம்எஸ் சிக்கியதால் பரபரப்பு

சென்னை: பாலியல் வழக்கில் கைதான ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது, பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் மற்றும் பயிற்சியில் உள்ள மாணவிகள் என பலர் வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்து வருகின்றனர். எனவே, அவரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் மிகவும் பழமையானது, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி. இங்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் விளையாட்டு பயிற்சி பெறுகின்றனர். குறிப்பாக, மாணவிகள் தான் அதிகளவில் உள்ளனர். இந்த கல்லூரியின் முதல்வராக கேரள மாநிலத்தை சேர்ந்த ஜார்ஜ் ஆபிரகாம் (50) இருந்தார்.

இவர், ஆசியா மற்றும் தேசிய அளவில் நடந்த பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்கள் பெற்றவர். மேலும், ஆணழகன் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார். இவர், ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியின், முதல்வராக பணியாற்றிய காலத்தில் தான், மாணவர்கள் தேசிய மற்றும் மாநில அளவில் நடந்த போட்டிகளில் அதிகளவில் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. முதல்வராக ஜார்ஜ் ஆபிரகாம் விளையாட்டு மற்றும் நிர்வாகத்தில் திறமையானவராக இருந்தாலும், மாணவிகள் விஷயத்தில் பலவீனமானவராகவே இருந்துள்ளார். முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது, கல்லூரி மாணவிகள் பலர் பாலியல் ரீதியாக தங்களை தொந்தரவு செய்கிறர் என்று, முதல்வர் ஜார்ஜுக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23 வயது மாணவி ஒருவர் சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தைரியமாக அவர் மீது பாலியல் புகார் அளித்தார்.

அந்த புகாரின் படி ஒய்எம்சிஏ உடற் கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவர், போலீசாரின் கைதில் இருந்து தப்பிக்க உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். சில நாட்கள் கல்லூரிக்கு வராமல் இருந்த ஜார்ஜ் ஆபிரகாம் மீண்டும் தனது முதல்வர் பணியை தொடங்கினார். ஆனால் அவர், விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வரும் மாணவிகளுக்கு, ‘சிறப்பு பயிற்சி’ என்று அழகான மற்றும் நல்ல உடல் அமைப்புள்ள மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு தனியாக பயிற்சி அளித்து வந்துள்ளார்.

அப்படி பயிற்சி அளிக்கும் போது, தான் 17 வயது மாணவியிடம் அவர் பாலியல் ரீதியாக உடல்களை தொட்டு தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து மாணவி முதலில் வெளியே சொல்லாமல் இருந்துள்ளார். ஆனால் முதல்வர், அந்த மாணவியை உடற்பயிற்சி கூடத்திற்கு அழைத்து வலுக்கட்டாயமாக தொந்தரவு செய்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி சம்பவம் குறித்து ஒய்எம்சிஏ உடற் கல்வியியல் கல்லூரி நிர்வாகத்திடம் முதல்வர் மீது ஆதாரத்துடன் அழுதபடி புகார் அளித்தார். பிறகு கல்லூரி நிர்வாகம், மாணவி அளித்துள்ள புகாரின் படி, கல்லூரியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று ஆய்வு செய்த போது, முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம், சம்பவத்தன்று மாணவியை தனியாக உடற்பயிற்சி கூடத்திற்கு அழைத்து செல்வதும், பிறகு அந்த மாணவி அழுதபடி வெளியே வரும் காட்சிகள் இருந்தது. அதைதொடர்ந்து கல்லூரி நிர்வாகம் முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது.

அந்த புகாரின் படி அனைத்து மகளிர் போலீசார், முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் போலீசார் கைது செய்ததால், அவரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் மற்றும் தற்போது கல்லூரியில் படித்து வரும் மாணவிகள் என 10க்கும் மேற்பட்ேடார் ஒய்எம்சிஏ உடற் கல்வியியல் கல்லூரி நிர்வாகத்துக்கு இ-மெயில் மூலமாகவும், கடிதம் மூலமாகவும் பாலியல் புகார் அளித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

அந்த புகார்களை ஒய்எம்சிஏ உடற் கல்வியியல் கல்லூரி நிர்வாகிகள் போலீசாரிடம் அளித்துள்ளனர். புகார் அளித்துள்ள மாணவிகளின் பெயர்கள் உள்ளிட்டவை அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போலீசார் ரகசியமாக வைத்துள்ளனர். முன்னாள் மாணவிகள் சிலர் அனுப்பிய புகார் கடிதம் குறித்து போலீசார் கூறியதாவது: முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம், ‘எனக்கு தேசிய விளையாட்டு துறையில் அதிகாரிகள் பலர் தெரியும்.. அவர்களுடன் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்களை காட்டி நம்ப வைத்துள்ளார். பிறகு அவர்கள் மூலம் மாணவிகளுக்கு தேசிய மற்றும் ஆசியா போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு பெற்று தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.

தனிப்பயிற்சி என கல்லூரியில் உள்ள உடற் பயிற்சி கூடத்திற்கு அழைத்தும், சில நேரங்களில் மாவட்ட அளவில் நடக்கும் போட்டிகளுக்கு வெளியூர் சென்ற போது, நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து சென்றும் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். ஆனால், அவர் எந்த மாணவிகளுக்கும் தேசிய போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு பெற்று தரவில்லை. முதல்வருக்குதான் கல்லூரியில் சிறந்த மாணவர்களை தேர்வு செய்யும் அதிகாரம் இருப்பதால், அதை பயன்படுத்தி பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். அதோடு இல்லாமல், முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் கல்லூரியில் பயிற்சி முடித்து வெளியே சென்ற முன்னாள் மாணவிகள் சிலரை தொடர்பு கொண்டு, பிரபல பள்ளிகள், கல்லூரிகளில் உடற் பயிற்சி ஆசிரியர் பணி வாங்கி தருவதாக கூறி, அவர்களுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பி மிரட்டி அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.

அதற்கான ஆதாரங்களும் முன்னாள் மாணவிகள் சிலர் புகார் மனுவுடன் இணைத்துள்ளனர். தற்போது கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் மாணவிகள் சிலரை, அவர்களின் செல்போன் வாட்ஸ் அப் எண்ணிற்கு குறுஞ்செய்திகள் அனுப்பி அதன் மூலம் அவர்களை முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் தன் வசப்படுத்தியுள்ளார். அதற்கான ஆதாரங்களை தற்போது கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் மாணவிகள் தங்களது புகாரில் தெரிவித்துள்ளனர். மேலும், மாணவிகளின் புகார்களை உறுதிப்படுத்தும் வகையில், கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் செல்போனில் சில ஆதாரங்கள் சிக்கியுள்ளது. ஆனால், ஆபாச வீடியோக்களை அவர் அழித்துள்ளார். இதனால் ஜார்ஜ் ஆபிரகாம் செல்போனை தடயவியல் துறைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாமால் பாதிக்கப்பட்ட முன்னாள் மற்றும் தற்போது பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் புகார் அளித்து வருவதால் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காவலில் எடுத்து விசாரணை நடத்திய பிறகு தான், மாணவிகள் அளித்த புகார்களின் உறுதித்தன்மை குறித்து தெரியவரும். அதன் பிறகே ஜார்ஜ் ஆபிரகாம் தனது முதல்வர் பணிக்காலத்தில் எத்தனை மாணவிகளை ஏமாற்றி பாலியல் தொந்தரவு செய்துள்ளார் என்பது குறித்து முழுமையாக தெரியவரும். அந்த புகார்களின் உறுதித்தன்மைக்கு ஏற்ப அடுத்தடுத்த வழக்குகளில் முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் கைது செய்யப்படுவார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: