மதுரை ஏர்போர்ட்டில் பயணி தாக்கப்பட்ட சம்பவம் எடப்பாடி, மாஜி அமைச்சர் மீது வழக்கு

மதுரை: மதுரை விமான நிலையத்தில் பயணி தாக்கப்பட்ட சம்பவத்தில், எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் காலை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை வந்தார். விமான நிலைய நுழைவாயிலை நோக்கி அவர் பேருந்தில் பயணித்தபோது, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த அமமுக பிரமுகர் ராஜேஸ்வரன், எடப்பாடி பழனிசாமியை பார்த்து, ‘துரோகத்தின் அடையாளம்’ எனக்கூறி வீடியோ எடுத்து வலைத்தளங்களில் பதிவிட்டார். உடனே எடப்பாடியின் பாதுகாவலர், செல்போனை தட்டி விட்டார். தொடர்ந்து பஸ்சை விட்டு இறங்கிய ராஜேஸ்வரனை, எடப்பாடியை வரவேற்க கூடியிருந்த அதிமுகவினர் சரமாரியாக அடித்து, உதைத்தனர்.

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் எம்எல்ஏ புகாரின் பேரில் போலீசார் ராஜேஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் ராஜேஸ்வரன் கொடுத்த புகாரில், எடப்பாடி பழனிசாமியுடன் வந்த அதிமுகவினர் தன்னை தாக்கி ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள செல்போனை பறித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம் சாட்டி இருந்தார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி, அவரது பாதுகாப்பு அதிகாரி கிருஷ்ணன், சிவகங்கை எம்எல்ஏ செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் மணிகண்டன்,  அக்ரி கிருஷ்ணமூர்த்தி மகன் திருவண்ணாமலை மற்றும் அடையாளம் தெரியாத நபர் என 6 பேர் மீது ஐ.பி.சி.392 (செல்போனை பறித்தல்), 506-1 (கொலை மிரட்டல்), 323 (தாக்குதல்), 294.பி (அவதூறாக பேசுதல்), 109 (குற்ற நடவடிக்கையில் ஈடுபட தூண்டுதல்), 199 (பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துதல்), 341 (தனிநபரை தவறாக கட்டுப்படுத்துதல்) ஆகிய 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: