என்.எல்.சி. விவகாரத்தில் ராணுவமே வந்தாலும் உறுதியாக போராடுவோம்: அன்புமணி பேட்டி

சென்னை: என்.எல்.சி விவகாரத்தில் ராணுவமே வந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. தொடர்ந்து, உறுதியாக போராடுவோம் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார். சென்னை, தி.நகரில் பாமக தலைவர் அன்புமணி அளித்த பேட்டி: கடலூரில் பாமக மாவட்ட நிர்வாகம் சார்பில் நெய்வேலி நிலக்கரி நிறுவன நிர்வாகத்தை எதிர்த்து வெற்றிகரமாக முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே நடத்தப்படுகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை காட்டிலும் 100 மடங்கு பிரச்னை என்.எல்.சியால் இந்த 5 மாவட்டங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதனை தவிர்க்கவே தொடர்ந்து போராட்டம் நடத்துகிறோம். என்.எல்.சி வருவதற்கு முன்னதாக 8 அடியிலேயே நிலத்தடி நீர் கிடைத்தது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் 1000 அடிக்கு கீழ் நிலத்தடி நீர் சென்றுவிட்டது. என்எல்சி 2025க்குள் தனியாருக்கு விற்கப்பட இருப்பதாக நாடாளுமன்றத்தில் கூறியுள்ளனர். இந்நிலையில், ஏன் நிலங்களை கையகப்படுத்தும் என்.எல்.சி நிர்வாகத்திடம் தமிழக அரசு துணை போகிறது. இந்த நிர்வாகத்தின் காற்று மாசுவால் ஆஸ்துமா, நுரையீரல் பிரச்னை ஏற்படுகிறது. அதேபோல,  நிலம் கொடுத்தவர்களுக்கு நிரந்தர பணி இன்றளவும் வழங்கப்படவில்லை.

எனவே, தான் என்எல்சியே வேண்டாம் என்பது எங்கள் நிலைப்பாடாக உள்ளது. அதேபோல, ராஜஸ்தான் மாநிலத்திற்கு அடுத்து நெய்வேலியில்தான் இந்தியாவில் 2வது பாலைவனமாக உள்ளன. என்எல்சி நிர்வாகத்தால் சுமார் 40,000 ஏக்கர் நிலம் பாலைவனமாகி விட்டது. தமிழ்நாட்டின் மின்சார தேவை 18 ஆயிரம் மெகாவாட், அதிகபட்சம் 22,000 மெகாவாட். இதில் என்எல்சியால் தமிழ்நாட்டுக்கு 800 மெகாவாட் மட்டுமே கிடைக்கும். வேளாண்மையை பாதுகாக்க நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம். என்எல்சி நிலங்களை கையகப்படுத்தினால் ராணுவமே வந்தாலும் எங்களுக்கு கவலையில்லை, உறுதியாக தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: