தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரே நாளில் ரூ.640 உயர்ந்தது: மீண்டும் சவரன் ரூ.42,000ஐ தாண்டியது; நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி

சென்னை: தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஒரு நாள் உயர்வதும், மறுநாள் இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி தங்கம் விலை சவரன் ரூ.42,008க்கு விற்பனையானது. 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. 6ம் தேதி தங்கம் விலை சவரன் ரூ.42,000, 7ம் தேதி ரூ.41,880, 8ம் தேதி ரூ.41,320, 9ம் தேதி சவரன் ரூ.41,240க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 4 நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 வரை குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியடைய செய்திருந்தது.

தொடர்ந்து தங்கம் விலை சரிந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அதிகரித்தது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.35 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.5,190க்கும், சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.41,520க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை திடீர் உயர்வு நகை வாங்குவோரை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்வை சந்தித்தது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,270க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,160க்கும் விற்கப்பட்டது.

தொடர்ந்து 2 நாளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.920 உயர்ந்தது. அதே நேரத்தில் தங்கம் விலை மீண்டும் 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருவது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை (திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.

Related Stories: