ஹோலி கொண்டாட்டத்தின் போது ஜப்பான் பெண்ணின் தலையில் முட்டை உடைத்து தாக்குதல்: போலீசுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

புதுடெல்லி: டெல்லியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது ஜப்பான் பெண்ணின் தலையில் முட்டை உடைத்த சம்பவம் குறித்த அறிக்கையை கேட்டு மகளிர் ஆணையம் போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.  கடந்த சில நாட்களுக்கு முன் நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. வர்ண பூச்சுகளை மக்கள் ஒருவர் மீது ஒருவர் வீசி மகிழ்ச்சியாக கொண்டாடினர். அந்த வகையில் ஜப்பானில் இருந்து டெல்லி வந்த இளம்பெண்ணின் மீது வலுக்கட்டாயமாக சில விஷமிகள் வர்ணப் பொடிகளை தூவினர். இளம்பெண்ணின் தலைமுடியை பிடித்த வாலிபர் ஒருவர், அந்தப் பெண்ணின் தலையில் முட்டையை உடைத்தார். அந்த பெண் அந்த இளைஞரிடம் இருந்து தப்பிக்க முயன்றார். ஆனால் அங்கிருந்த யாரும் அந்தப் பெண்ணுக்கு உதவவில்லை. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் குறித்த விபரங்களை ஜப்பான் தூதரகத்திடம் போலீசார் கேட்டுள்ளனர். மேலும் வைரல் வீடியோவில் காணப்படும் இளைஞர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே டெல்லி மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்டு, டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் அறிக்கையை டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி, டெல்லி போலீசிடம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘டெல்லியில் நடந்த ஹோலி பண்டிகையின் போது ஜப்பானை சேர்ந்த இளம்பெண்ணை துன்புறுத்தி தாக்கிய வழக்கில் 3 பேரை கைது செய்துள்ளோம். சுற்றுலா பயணியாக டெல்லி வந்த அந்தப் பெண், பஹர்கஞ்சில் தங்கியிருந்தார். அந்தப் பெண் தரப்பில் இதுவரை புகார் அளிக்கவில்லை. தற்போது அந்தப் பெண் பங்களாதேஷுக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார். தற்போது அவர் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் டுவிட் செய்துள்ளார்’ என்று தெரிவித்தனர்.

Related Stories: