தாளவாடி மலைப்பகுதியில் கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைப்பு: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு

சத்தியமங்கலம்: தாளவாடி  மலைப்பகுதி மல்கொத்திபுரம் தொட்டி கிராமத்தில் கால்நடைகளை வேட்டையாடும்  சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான  சிறுத்தைகள் வசிக்கின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும்  சிறுத்தைகள் விவசாய தோட்டங்களில் புகுந்து விவசாயிகள் வளர்க்கும் ஆடு,  மாடு, காவல் நாய் உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடுவது தொடர் கதையாக உள்ளது.  தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மல்கொத்திபுரம் தொட்டி வனப்பகுதியில் இருந்து  வெளியேறும் சிறுத்தை கடந்த ஓராண்டாக பல்வேறு கால்நடைகளை வேட்டையாடி கொன்று  குவித்ததால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளதோடு விவசாய  தோட்டத்தில் நடமாடும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என  வளத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து தாளவாடி  வனத்துறையினர் உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று மல்கொத்திபுரம் தொட்டி  கிராமத்தில் உள்ள விவசாயி செல்வராஜ்  தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள  பாக்குத்தோப்பில் தானியங்கி கேமராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை  உறுதி செய்தனர்.  இதையடுத்து நேற்று அப்பகுதியில் வனத்துறை சார்பில்  சிறுத்தையை பிடிப்பதற்காக கூண்டு வைக்கப்பட்டது. சிறுத்தை கூண்டை அடையாளம்  கண்டுபிடிக்காமல் கூண்டின் மீது தென்னை ஓலை மற்றும் இலை, தழைகளை பரப்பி  உள்ளனர். கூண்டு வைக்கப்பட்டுள்ள பகுதியில் வனத்துறையினர் இரவு நேரத்தில்  ரோந்து செல்வதாகவும், தேவைப்பட்டால் அதே பகுதியில் கூடுதலாக ஒரு கூண்டு  வைக்கப்படும் எனவும், கூண்டில் சிறுத்தை பிடிபட்டவுடன் பாதுகாப்பாக   அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடப்படும் என தாளவாடி வனச்சரக  அலுவலர் சதீஷ் தெரிவித்தார்.

Related Stories: