கோவை கார் வெடிப்பு வழக்கு கைதான 5 பேரிடம் 3வது முறையாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

கோவை: கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான 5 பேரை ஏழு நாட்கள் காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக்டோபர் 23ம் தேதி கார் வெடித்து, அதில் இருந்த அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் (29) என்பவர் உயிரிழந்தார். உயிரிழந்த ஜமேஷா முபினுக்கு தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு விசாரணை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ள முகமது அசாருதீன், பெரோஸ் இஸ்மாயில், நவாஸ் இஸ்மாயில், உமர் பாரூக், பெரோஸ் கான் ஆகிய 5 பேரை 7 நாட்கள் காவலில் விசாரிக்க என்ஐஏவுக்கு நேற்று முன்தினம் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, என்ஐஏ அதிகாரிகள் ஐந்து பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று கோவைக்கு அழைத்து வந்தனர். கோவையில் போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து 5 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, இவர்களிடம் 2 முறை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தற்போது 3வது முறை விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: