தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் சென்னையில் வெள்ள பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேச்சு

சென்னை: தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் சென்னையில் வெள்ள பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். டெல்லியில் விஞ்ஞான் பவனில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பேரிடர் அபாயத்தை குறைப்பதற்கான தேசிய அளவிலான மூன்றாவது அமர்வு கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்துகொண்டார். கூட்டத்தில் பேசிய அவர்; கடைக் கோடி மக்களைச் சென்றடையும் வகையில், எச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்துதல், வானிலை கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் வெள்ளத்தைத் தணிப்பதற்கான திட்டங்களைத் செயல்படுத்துதல் ஆகியவற்றை இந்திய அரசிடமிருந்து நிதி வரப்பெறும் வரை காத்திராமல் தமிழ்நாடு அரசு விரைந்து செயல்படுத்தி வருகிறது.

1400 தானியங்கி மழை மானிகள் மற்றும் 100 தானியங்கி வானிலை நிலையங்கள் நிறுவுதல், இரண்டு டாப்ளர் வானிலை ரேடார்களை நிறுவுதல் மற்றும் மேல் அடுக்கு வானிலை கண்காணிப்பு அமைப்புகளை உருவாக்குதல் ஆகியவை தமிழ்நாடு அரசின் முன்னோடியான முயற்சிகள் ஆகும். இந்த முயற்சிகள் மாநிலத்தின் நீர்-வானிலை மற்றும் வானிலை கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்தும். ரூ.71.22 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள சென்னை நிகழ்நேர வெள்ள முன்னறிவிப்பு மற்றும் இடம் சார்ந்த முடிவு ஆதார அமைப்பு நிகழ்நேர தரவு மற்றும் திட்டமிடப்பட்ட மழைப்பொழிவின் அடிப்படையில் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறியும் ஒரு தனித்துவமான முயற்சியாகும்.

இந்த அமைப்பு மழைப்பொழிவிற்கான முன்னறிவிப்புகளை வழங்கவும், சென்னை நகரத்தை சுற்றி அமைந்துள்ள நீர்த்தேக்கங்களின் நீர் வரத்தை மதிப்பீடு செய்யவும் உதவுகிறது. இதன் காரணமாக சென்னை வடிநிலப்பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர் மேலாண்மை செயல்பாடுகளை மேற்கொள்ளவும் உதவுகிறது. தமிழக அரசு மேற்கொண்ட வெள்ளத் தணிப்பு பணிகளின் காரணமாக, சென்னையில் வெள்ள பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது.15வது நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு முயற்சியான “சென்னை நகர வெள்ள அபாயத்தைக் குறைத்தல்” திட்டத்தின் கீழ் 2021 - 2026  வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும், இந்த நிதி இதுவரை மத்திய அரசால் விடுவிக்கப்படவில்லை. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், பல்வேறு விவரங்களை பரிந்துரைத்து, ஆலோசகர்கள் மூலம் பரிசீலிக்கும் பொருட்டு திட்ட விவரங்களைக் கேட்பதன் காரணமாக, நிதி விடுவிக்கப்படுவதில் பெரும் கால தாமதம் ஏற்படுகிறது. 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கும் பருவமழைக்கு முன்னதாக தணிப்புப் பணிகளின் பெரும்பகுதியை முடிக்க இந்த நிதியை மேலும் கால தாமதமின்றி விடுவிக்குமாறு உள்துறை அமைச்சகத்தை நான் கேட்டுக்கொள்கிறேன். 15வது நிதிக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற இன்னும் மூன்று ஆண்டுகள் மட்டுமே எஞ்சியுள்ளது என்பதையும் நான் சுட்டிக் காட்ட விழைகிறேன்.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதளுக்கு காத்திருப்பதும் மற்றும் ஒவ்வொரு திட்டப் பணிக்கும் மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்பதாலும் மாநிலங்களுக்கு நிதி வழங்குவது தாமதம் ஏற்படுவதால் இந்த திட்டத்திற்கான ஒதுக்கீடுகளின் நோக்கம் பயனற்றதாக மாறிவிடுகிறது. 2022 ஆம் ஆண்டில் உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட மாநில பேரிடர் நிவாரண நிதியின் விதிமுறைகளின் படி, சேதமடைந்த நீர் வழங்கல் அமைப்புகளை சரிசெய்வதற்காக, ஒரு நிறுவலுக்கு ரூ.2.00 லட்சம் வழங்க இயலும்.  இந்த விதிமுறை கிராமங்களில் உள்ள நீர்நிலைகளில் இருந்து அந்தந்த கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு பயன்படுத்தப்படும் அமைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்.

தமிழ்நாடு போன்ற தண்ணீர் தட்டுபபாடு உள்ள மாநிலத்தில், பல்வேறு ஒருங்கிணைந்த குடிநீர் திட்டங்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதிக குதிரை சக்தி திறன் கொண்ட பம்புகள் பயன்படுத்தியும், பெரிய குழாய்கள் மூலம் வெகு தூர இடங்களில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளால் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இத்தகைய சேதங்கள் தனித்தனியாக வகைப்படுத்தப்பட வேண்டும் மற்றும் ஹெட் ஒர்க்ஸ், மெயின் பம்ப், ஊடுருவல் கிணறு போன்ற பல்வேறு வகையான அமைப்புகளுக்கு அதிக அளவிலான சேத நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

2017, 2018, 2020 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட புயலின் காரணமாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனத்தின் மின் விநியோக அமைப்பில் பெரும் சேதம் ஏற்பட்டது. இந்த அனுபவத்தின் அடிப்படையில், 11 ரிக்ஷி இலிருந்து 33 ரிக்ஷி வரையிலான சேதமடைந்த மின் கட்டமைப்புகளை சீரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யும் வகையில் மாநில பேரிடர் நிவாரண நிதியின் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என தமிழக அரசு பரிந்துரைத்தது. 2022 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட விதிமுறைகளில் மின் விநியோக முறைக்கான குறிப்பிட்ட விதிகள் எதுவும் சேர்க்கப்படவில்லை. மாநிலங்களின் பொறுப்புகளைக் கருத்தில் கொண்டு மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் தேசிய பேரிடர் நிவாரண நிதி விதிமுறைகளை மறு ஆய்வு செய்யுமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்.

மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டைக் கொண்டு நிவாரணம் மற்றும் தற்காலிக மறுசீரமைப்பின் ஒரு பகுதியை மட்டுமே செயல்படுத்த முடிகிறது. மீட்பு மற்றும் புனரமைப்பு நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. 15வது நிதிக் குழு, மீட்பு மற்றும் புனரமைப்புக்கான தனி நிதித் தலைப்பை உருவாக்க பரிந்துரைந்துள்ளது. சுனாமி 2004க்கு பிந்தைய புனரமைப்பு திட்டங்கள் உட்பட பெரிய அளவிலான மீட்பு மற்றும் புனரமைப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு நன்கு கையாண்டுள்ளது. இத்தகைய பெரிய அளவிலான மீட்பு மற்றும் புனரமைப்புத் திட்டத்தை திறம்பட செயல்படுத்தியதற்காக உலக அளவில் தமிழ்நாடு அரசு பாராட்டையும் பெற்றுள்ளது. பெரிய அளவிலான மீட்பு மற்றும் புனரமைப்பு திட்டங்களைத் திட்டமிட்டு செயல்படுத்த தமிழ்நாடு அரசு அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளது.

மீட்பு மற்றும் புனரமைப்புத் திட்டங்களை நிர்வகிப்பதற்கான தொழில்நுட்பத் திறன் மற்றும் நிர்வாகத் திறனும் எங்களிடம் உள்ளது. பேரிடர்களால் பாதிப்பிற்குள்ளாகும் சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ப முன்னுரிமை அடிப்படையில் திட்டங்களை செயல்படுத்த மாநில அரசுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும் என இந்திய அரசை நான் வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறினார்.

Related Stories: