ஆணவக் கொலைத் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்கள் பொது வெளியில் நடத்தப்பட்டால் தான் பொதுமக்களுக்கு அது சென்றடையும்: ஐகோர்ட் கருத்து

சென்னை: ஆணவக் கொலைத் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்கள் பொது வெளியில் நடத்தப்பட்டால் தான் பொதுமக்களுக்கு அது சென்றடையும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த கவுசல்யா மாற்று ஜாதியைச் சேர்ந்த சங்கர் என்பவரை கடந்த 2015ம் ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி கவுசல்யாவையும், அவரது கணவர் சங்கரையும், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது.

அதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் கவுசல்யா உயிர் தப்பினார். உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, உள்ளிட்ட 6 பேருக்குத் தூக்கு தண்டனையும், தன்ராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், மணிகண்டன் என்பவருக்கு 5 ஆண்டுச் சிறைத்தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருப்பூர் மாவட்ட வன்கொடுமைத் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம், இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்து உத்தரவிட்டது. மேலும், 5 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்துத் தீர்ப்பளித்தது. கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உட்பட 3 பேரின் விடுதலையையும் உறுதி செய்தது. இதனிடையே இது தொடர்பாக சங்கர் சமூக நீதி அறக்கட்டளையின் நிறுவனரான கவுசல்யா தாக்கல் செய்த மனுவில், தன்னை சாதி மறுப்பு திருமணம் செய்ததால் தனது கணவரான உடுமலை சங்கர் ஆணவக் கொலை செய்யப்பட்டதையடுத்து, சாதி மறுப்பு திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூட்டங்கள் நடத்தி வருவதாக கூறியுள்ளார்.

இதன் ஒருபகுதியாக சங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு மார்ச் 12ம் தேதி உடுமலை குமாரமங்கலம் பேருந்து நிலையம் அருகே கூட்டம் நடத்த அனுமதிக் கோரி விண்ணப்பித்ததாகவும், அதற்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு இன்று நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில், சங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த கடந்த 7 ஆண்டுகளாக அனுமதியளிக்கப்படவில்லை எனவும், உள்ளரங்க கூட்டமாக நடத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த கூட்டத்தை நடத்துவதில் தங்களுக்கு விருப்பமில்லை என சங்கரின் சகோதரர் மனு அளித்துள்ளதாகவும், அப்பகுதியில் சங்கரின் உறவினர்கள் உள்ளதாலும், சங்கரின் குடும்பத்தார் மூலம் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பிருக்கலாம் என்பதாலும் அனுமதி அளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, ஆணவக் கொலை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்கள் பொது வெளியில் நடத்தப்பட்டால் தான் பொதுமக்களுக்கு அது சென்றடையும் என தெரிவித்த நீதிபதி, நினைவேந்தல் கூட்டம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: