ஊட்டி அருகே காத்தாடிமட்டம் ஆதிதிராவிடர் நல விடுதியில் தண்ணீர் விநியோகமின்றி மாணவர்கள் அவதி

*நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தகவல்

ஊட்டி : ஊட்டி அருகே காத்தாடிமட்டம் ஆதிதிராவிடர் நல விடுதியில் கடந்த ஒரு வார காலமாக தண்ணீர் விநியோகமின்றி மாணவர்கள் கடும் அவதியடைந்த நிலையில், தட்டுபாடின்றி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே காத்தாடிமட்டம் பகுதியில் ஆதிதிராவிடர் நல பள்ளி மாணவர் விடுதி உள்ளது. காத்தாடிமட்டம் அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வந்தனர். கடந்த ஆண்டுகளாக தங்கி பயில மாணவர்கள் இல்லை.

இந்நிலையில் ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்காக ஊட்டி கூட்ஷெட் பகுதியில் இருந்த மாணவர் விடுதி பழமையானதாக இருந்ததால், அந்த விடுதி இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகள் முடிந்து மீண்டும் திறக்கும் வரை, அங்கு தங்கியிருந்த மாணவர்கள், ஊட்டியில் இருந்து சுமார் 20 க.மீ., தொலைவில் அமைந்துள்ள காத்தாடிமட்டம் ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி பயில நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்விடுதியில் தற்போது சமவெளி பகுதிகளை சேர்ந்த சுமார் 40 பாலிெடக்னிக் மாணவர்கள் தங்கி தினமும் அரசு பஸ் மூலம் ஊட்டி சென்று பயின்று வருகின்றனர்.

விடுதி மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு பாலகொலா ஊராட்சி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் மோட்டார் பழுது காரணமாக இப்பகுதிக்கு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக குடிநீர் விநியோகம் இல்லாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களும் கடும் பாதிப்படைந்தனர். குறிப்பாக உணவு தயாரிக்க மற்றும் குளிக்க தண்ணீர் இன்றி கடும் அவதியடைந்தனர். மோட்டார் சரி பார்க்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மேலும் சில நாட்களுக்கு தண்ணீர் விநியோகம் இருக்காது என கூறப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் மாவட்ட கலெக்டர் அம்ரித்தின் கவனத்திற்கு இப்பிரச்னை கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் மூலம் தற்காலிகமாக லாரி மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தொட்டிகளில் நிரப்பப்பட்டன. தொடர்ந்து தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறுகையில், காத்தாடிமட்டம் அரசு மாணவர் விடுதியில் மாணவர்கள் பயன்பாட்டிற்காக தற்காலிகமாக லாரி மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு நிரப்பப்பட்டு உள்ளது. இன்று மாலைக்குள் தட்டுபாடின்றி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.

Related Stories: