தமிழக தொழிற்சாலைகளில் 80 சதவீதம் தமிழர்களுக்கு வேலை வழங்கவேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

திருத்தணி: திருத்தணி கமலா திரையரங்கம் அருகில் பாமக 2.0 விளக்க பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாநில துணைத் தலைவர் டாக்டர் வைத்தியலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான இ.தினேஷ்குமார், மாவட்ட தலைவர் விஜயன் ஆகியோர் வரவேற்று பேசினார். முன்னாள் எம்எல்ஏ கோ.ரவிராஜ், பாலயோகி, ஒன்றிய கவுன்சிலர் நா.வெங்கடேசன், மணவூர் சே.பூபதி, செல்வம், குப்புசாமி, ராதா, பொன்ஜோதி குமார், பாலாஜி, உலகநாதன், தருமா, மதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது; தமிழக அரசு ஆன்லைன் ரம்மி சட்ட மசோதா தாக்கல் செய்து 142 நாட்களாகிறது. இந்த மசோதாவுக்கு கவர்னர் இதுநாள் வரையில் ஒப்புதல் அளிக்காத காரணத்தால் தற்போது வரை 18 பேர் தற்கொலை செய்துள்ளனர். இந்த தற்கொலைக்கு தமிழக கவர்னர்தான் பொறுப்பேற்க வேண்டும். நான் ஆட்சியில் இருந்தால் சட்டப்பிரிவு 162 ஐ அமல்படுத்தி ஆன்லைன் சட்டத்தை தடை செய்திருப்பேன். பாமக கடந்த 16 ஆண்டுகளாக நிழல் வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறது.

தற்போது தமிழக அரசும் வேளாண்மை பட்ஜெட்டை தனியாக தாக்கல் செய்துள்ளது. வடமாநில தலைவர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. எனவே தமிழக தொழிற்சாலைகளில் 80 சதவீதம் பணிகளை தமிழர்களுக்கு வழங்க சட்ட மசோதா கொண்டு வரவேண்டும். இது போன்ற மசோதா ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் உள்ளது. தமிழ்நாட்டில் 25 மணல் குவாரிகளும் 45 மாட்டு வண்டி குவாரிகளும் உள்ளது. இதனை மூட வேண்டும். கூடுதலாக 3 ஆயிரத்து 500 பேருந்துகளை சென்னையில் இயக்க வேண்டும். பெண்களுக்கு பேருந்துகள் இலவச பயணத்தை அனுமதித்தது போன்று அனைத்து தரப்பினருக்கும் இலவச பயணத்தை வழங்க வேண்டும்.

இதன் மூலம் விபத்துக்கள் குறையும். காற்று மாசு அடைவது குறையும். இதன்மூலம் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மாதந்தோறும் 3 ஆயிரத்து 500 ரூபாய் சேமிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு பேசினார். இந்த கூட்டத்தில், முன்னாள் மாவட்ட செயலாளர் ஏ.கே.மணி, ஒன்றிய கவுன்சிலர் விநாயகம், கார்த்திக், பொன்னுசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். நகர செயலாளர் சேகர் நன்றி கூறினார்.

Related Stories: