தனியார் அடுக்குமாடி குடியிருப்பு, வணிக வளாகங்களில் பாதுகாப்பு கருவி இல்லாமல் தொழிலாளர் கழிவுநீரகற்றினால் கடும் நடவடிக்கை: தேசிய தூய்மைப் பணியாளர் மறுவாழ்வு ஆணையத் தலைவர் எச்சரிக்கை

சென்னை: தேசிய தூய்மைப் பணியாளர் மறுவாழ்வு ஆணையத் தலைவர் மா.வெங்கடேசன், பெருங்குடி மண்டலம், காமராஜர் நகர் 2-வது பிரதான சாலையில் உள்ள கிரீன் ஏக்கர்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, இக்குடியிருப்பு வளாகத்தில் கடந்த ஆண்டு ஜூன் 29ம்தேதி, கழிவு நீரகற்று பணிகளை மேற்கொள்ளும் பொழுது உயிரிழந்த பெரியசாமி மற்றும் தட்சிணாமூர்த்தி ஆகியோர் உயிரிழந்த இடத்தையும், சோழிங்கநல்லூர் மண்டலம், காரம்பாக்கம், சப்தகிரி நகர், பாக்கியம் பிரகதி அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த பிப்ரவரி 8ம்தேதி, கழிவு நீரகற்று பணிகளை மேற்கொள்ளும் பொழுது செந்தில் குமார் உயிரிழந்த இடத்தையும் ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பிறகு, தேசிய தூய்மைப் பணியாளர் மறுவாழ்வு ஆணையத் தலைவர் மா.வெங்கடேசன் நிருபர்களிடம் கூறியதாவது:   தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள் மற்றும் தனியார் குடியிருப்புகள், வணிக வளாகங்களில் உரிய அனுமதி மற்றும் உரிய பாதுகாப்பு உபகரணங்களின்றி கழிவு நீரகற்றும் பணிகளை மேற்கொண்டால் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்போர் நல சங்கங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். களப்பணியாளர்களின் மறுவாழ்வு நலன் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள், செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் குறித்தும், பணிப்பாதுகாப்பு உபகரணங்கள் குறித்தும் சென்னைக் குடிநீர் வாரியம் உரிய இடைவெளியில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து களப்பணியாளர்களையும் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தும் நிலையினை உறுதி செய்து களப் பணியாளர்களின் நலனில் அக்கறையோடு இருக்க வேண்டும் .

Related Stories: