வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொள்ளாச்சி இளநீருக்கு கிராக்கி

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் இருந்து வெளியூர்களுக்கு, வெயிலின் தாக்கத்தால் தினமும் 5 லட்சம் வரை இளநீர் அனுப்பி வைக்கப்படுகிறது. விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தென்னை விவசாயம் அதிகளவில் உள்ளது. இங்குள்ள தென்னைகளில் உற்பத்தியாகும் பச்சைநிற இளநீர் மற்றும் செவ்விளநீருக்கு, இன்னும் மார்க்கெட்டில் நல்ல கிராக்கி  உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் வரும்போது, பொள்ளாச்சியிலிருந்து வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் அதிகளவில் இளநீர் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

அதிலும், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இளநீர் விற்பனை சூடுபிடிக்கும். தற்போது, வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதால், பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல கிராமங்களில் இருந்து பச்சை இளநீர், செவ்விளநீர் விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது. கடந்த ஒன்றரை மாதத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகரிப்பின் காரணமாக, பொள்ளாச்சி இளநீருக்கு, வெளியூர்களில் மேலும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட பகுதியிலிருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து இளநீரை குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து வாங்கி செல்வது அதிகமாக உள்ளது. மேலும், தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திண்டுக்கல், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்யப்பட்டு அதிகளவு இளநீர் அனுப்பப்படுகிறது.

கடந்த ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக்கு பிறகு, தென்னைகளில் இளநீர் உற்பத்தி வழக்கத்தைவிட அதிகமானது. இதனால், இளநீரின் தேக்கத்தை தவிர்க்க குறைவான விலைக்கே நிர்ணயம் செய்யப்பட்டது. அதிலும், சில மாதமாக மிகவும் குறைந்த பட்சமான, பண்ணை நேரடி விலையாக ரூ.17க்கே விற்பனையாகியுள்ளது. பல இடங்களில் தேக்கத்தை தவிர்க்க கடந்த ஜனவரி மாதம் வரையிலும் ஒரு இளநீர் அதிபட்சமாக ரூ.18 வரை விற்பனையானது.

தற்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பண்ணை விலையிலும் கணிசமாக ஏற்றமடைந்துள்ளது. இந்த மாதம் துவக்கத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் வட மாநிலங்களுக்கு என நாள் ஒன்றுக்கு தலா 5 லட்சம் வரையிலான இளநீர் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில், நேற்றைய நிலவரப்படி பண்ணை விலை ஒரு இளநீர் தலா ரூ.27வரை உயர்ந்துள்ளதால், வரும் காலங்களில் ஓரளவு தென்னை விவசாயத்தில் லாபம் கிடைக்கபெறும் என்ற மகிழ்ச்சியில் விவசாயிகள் உள்ளனர்.

இது குறித்து தென்னை விவசாயிகள்  கூறுகையில்,``பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த ஆண்டில் அடுத்தடுத்து பெய்த  பருவமழையால், தென்னையில் இளநீர் உற்பத்தி அதிகரித்துள்ளது. தற்போது, வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாக உள்ள நிலையில், இளநீர் பறிக்கும் பணி தீவிரமாக உள்ளது. தென்னையிலிருந்து இளநீர் பறிக்க பறிக்க, கனரக வாகங்களில் இருந்து வெளியூர்களுக்கு இளநீர் அனுப்பி வைக்கும் பணியால், தோட்டங்களில் தேக்கமாவதில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது,வெளி மாவட்டம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநில வியாபாரிகள் நேரில் வந்து, இளநீரை வாங்கி செல்வது தற்போது அதிகரித்துள்ளது. இதில், செவ்விளநீரே அதிகளவு வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இன்னும் ஒரு மாதத்தில் கோடை வெயில் நெருங்கும்போது, வெளியூர்களுக்கு லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மூலம், விற்பனைக்காக செவ்விளநீர் மற்றும் பச்சை இளநீர் அனுப்பி வைப்பது தினமும் தலா 5 லட்சமாக அதிகரித்துள்ளது’’ என்றனர்.

Related Stories: