புத்தமங்கலம் கிராமத்தில் அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம்: எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம் கொளத்தூர் ஊராட்சியில் புத்தமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இங்கு, பள்ளி தொடங்கப்பட்ட ஆரம்ப காலத்தில் கட்டப்பட்ட சீமை ஓடு வகுப்பறை கட்டிடத்தில்  வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. நாளடைவில் கட்டிடம் பழுது காரணமாக அப்பள்ளியில் பயின்ற மாணவர்களின் பெற்றோர் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு அச்சப்பட்டதோடு அவர்கள், பிள்ளைகளை வேறொரு பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்த்தனர். இதனால், ஆண்டுதோறும் மாணவர்கள் சேர்க்கை குறைந்து தற்போது 50 மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர்.  

இப்பள்ளியில் உள்ள பழுதடைந்த கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி  மக்கள் கோரிக்கை விடுத்தனர். மிகவும் பழுதான பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு அப்பகுதியில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசு பொது நிதி மூலமாக ரூ.32 லட்சம்  ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் பழைய வகுப்பறை கட்டிடம் அகற்றப்பட்ட நிலையில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார்.

ஒன்றியக்குழு துணை பெரும் தலைவர் பிரேமா சங்கர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் குப்பன், நாகப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் செல்வி செல்லப்பன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் செய்யூர் தொகுதி எம்எல்ஏ பனையூர் பாபு கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுடன் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டினார். ஒன்றிய செயலாளர் சிற்றரசு, சித்தாமூர் ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் நிர்மல் குமார், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இனியமதி கண்ணன், சிம்பு, ஒன்றிய துணைச்செயலாளர்கள் பாஸ்கர், குமுதா மதுரை, பள்ளி தலைமை ஆசிரியர் பன்னீர் உள்ளிட்ட திமுக, விசிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: