காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை முதல் ஆட்சிமொழி சட்ட வார விழா: கலெக்டர் ஆர்த்தி தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ் ஆட்சி மொழி சட்டம் இயற்றப்பெற்ற 27.12.1956ம் நாளை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாடப்பட வேண்டும் என்று அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.  அதனடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை முதல் வரும் 16ம் தேதி வரை ஒருவார காலத்திற்கு ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாடப்படவுள்ளது.

ஆட்சிமொழி சட்ட வார விழா கொண்டாட்டங்களின் நிகழ்வுகளாக கணினி தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கம், ஆட்சிமொழி மின் காட்சியுரை, தமிழில் குறிப்புகள், வரைவுகள் எழுதுவதற்கான பயிற்சி, வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகைகள் அமைத்திடுவதற்கு வலியுறுத்தி வணிக நிறுவன உரிமையாளர்கள், வணிக நிறுவன அமைப்புகளுடன் கூட்டம், பட்டிமன்றம், ஆட்சிமொழி திட்ட விளக்க கூட்டம், விழிப்புணர்வு பேரணி ஆகியவை நடைபெற உள்ளன. தமிழ்நாடு அரசு, வாரியங்கள், கழகங்கள், அரசு உதவிபெறும் அமைப்புகள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தமிழமைப்புகள், தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், வணிகர்கள், வணிகர் சங்கங்கள் பொதுமக்கள் என அனைவரும் ஆட்சி மொழி சட்ட வார விழா நிகழ்வுகளில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: