×

சர்வதேச சிறுதானிய ஆண்டினை கொண்டாடும் வகையில் மதுரையில் சிறுதானிய கண்காட்சி: அமைச்சர்கள் பங்கேற்பு

மதுரை: சர்வதேச சிறுதானிய ஆண்டினை  கொண்டாடும் வகையில் மதுரையில் இன்று (7.3.2023) நடைபெற்ற சிறுதானிய கண்காட்சி மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய பொருட்களை அறிமுகம்  மற்றும் சிறுதானிய முக்கியத்துவம் குறித்த புத்தகத்தை வெளியிட்டு விழாவில் வேளாண்மை மற்றும் உழவர்  நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில், வேளாண்மை மற்றும் உழவர் பெருமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடத்தப்பட்ட போட்டிகளில்,  சிறந்த தீர்வு வழங்கியவர்களுக்கு பரிசுகள் வழங்கி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆற்றிய உரையாவது : -
“சர்வதேச சிறுதானிய ஆண்டினை முன்னிட்டு சிறுதானிய உணவின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக ஒன்றிய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகம், தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் சிறுதானிய விழா மற்றும் கண்காட்சியை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்தவர்களுக்கு, எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்  கொண்டார்.

இன்றைய வேகமான உலகில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு குறித்து நாம் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. நாம் அடைந்திருக்கும் பொருளாதார வளர்ச்சி, சமூக மாற்றம் ஆகியவை நம்முடைய உணவு பழக்க வழக்கங்களின் மாபெரும் மாற்றத்தை கொண்டு வந்து உள்ளதுடன், இன்று நம்மிடையே பரவியுள்ள பல்வேறு வகை உணவு பழக்க வழக்கங்களால் நாம்  - நம்முடைய பாரம்பரிய உணவு பழக்கத்திலிருந்து வெகு தூரம் சென்று விட்டோம். தமிழர்களின் பாரம்பரிய உணவு முறையில் முதலிடத்தில் இருந்தது  தினை, கேழவரகு, கம்பு, சோளம், சாமை, குதிரைவாலி போன்ற உடலுக்கு வலிமை சேர்க்கும் சிறுதானியங்கள். அதன் பிறகே, அரிசி -  கோதுமை போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

இந்த வகை சிறுதானியங்கள் ஊடுபயிராகவே விளைவிக்கப்பட்டு வந்தது. சிறுதானியங்கள் பயன்படுத்துவது மக்களிடையே குறைந்ததால்,  விவசாயிகளும் அதனை பயிரிடுவதை குறைத்து கொண்டனர். ஆனால், இன்றைய இளைய சமுதாயத்தினர் இடையே, ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இயற்கை உணவு முறைக்கு மாற ஆர்வம் காட்டுகின்றனர். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நம் விவசாயிகளும், தொழில்முனைவோர்களும், சிறுதானியங்களை விளைவிக்கவும், அவற்றை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றவும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

சிறுதானியங்களை விளைவிக்க வேளாண் துறை மூலம் பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அவ்வாறு விளைவிக்கப்படும் சிறு தானியங்களை மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்களாக மாற்றவும், உணவாக பதப்படுத்தவும், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளால் பல்வேறு மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரிய உணவு முறையில் மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருள்கள், உணவு பதப்படுத்துதல் ஆரம்ப காலம்  முதலே உள்ளது.

முதல்வர் பொறுப்பேற்றதிலிருந்து, வேளாண்மை துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அதற்கென தனி பட்ஜெட் அறிவிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் வருமானத்தை அதிகப்படுத்திடவும், அவர்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்திடவும், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. விவசாய பெருமக்களுக்கும், தொழில்முனைவோருக்கும் அரசு ஒரு பாலமாக செயல்பட்டு அவர்களின் தொழில் முன்னேற்றத்திற்கு பல்வேறு மானியங்களையும், கடனுதவிகளையும் வழங்கி வருகிறது.

கழக அரசு பொறுற்பேற்ற குறுகிய காலத்தில், தமிழ்நாடு முழுவதும் சமச்சீர் தொழில் வளர்ச்சியை கொண்டு வரும் வகையில், MSME துறையால் செயல்படுத்தப்படும் 3 வகையான சுயவேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் ரூ. 683 கோடி மானியத்துடன் ரூ. 2 ஆயிரத்து 756 கோடி வங்கிக் கடன் உதவி வழங்கப்பட்டு 19 ஆயிரத்து 332 இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர். இதில், ஒரு திட்டமான நீட்ஸ் திட்டத்தின் கீழ், 169 உணவு பதப்படுத்தும் தொழிலுக்கு ரூ. 19 கோடியே  29 லட்சம் மானியத்துடன் ரூ. 77 கோடி வங்கிக் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு நிறுவனங்களை  ஊக்கப்படுத்தும் விதமாக, முதலீட்டு மானியம், மின் மானியம், வட்டி மானியம் என 10 வகையான மானியங்கள் வழங்கப்படுகிறது.

கழக அரசு பொறுப்பேற்று இதுவரை 8 ஆயிரத்து 150 நிறுவனங்களுக்கு ரூ. 519 கோடி மானியமாக  வழங்கப்பட்டுள்ளது.  குறிப்பாக, 117 உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு ரூ. 19 கோடியே 70 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் திட்டம் (PM-FME) என்ற உணவு பதப்படுத்தும் குறுந்தொழிலுக்கான திட்டத்தின் கீழ்  3,073 உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கு  ரூ.67 கோடியே 19 லட்சம் மானியத்துடன் ரூ.225 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இங்கு நடைபெற்ற சிறுதானிய கண்காட்சியில்  விவசாயிகள், உற்பத்தியாளர்கள், வாங்குபவர் - விற்பவர், ஏற்றுமதியாளர்கள் ஆகியோர்களுக்கு இடையே சந்திப்புகளும், சிறுதானிய நன்மைகள் குறித்த கருத்தரங்கமும், மகளிர் சுய உதவி குழுக்களிடையேயான போட்டிகளும், சிறு தானிய உணவு செய்முறை விளக்கங்களும் நடத்தப்பட்டுள்ளது.

இந்த விழாவில், வேளாண்மை மற்றும் உழவர் பெருமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடத்தப்பட்ட போட்டிகளில்,  சிறந்த தீர்வு வழங்கியவர்களுக்கு  பரிசுகள் வழங்கப்பட உள்ளது.  மேலும், வேளாண் தொழில் பெரு வழித்தட விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் முக்கியத்துவம் குறித்த புத்தகம் வெளியிடப்பட்டு உள்ளது. இவ்வாறு வேளாண்மைக்கு உதவிடும் வகையில் பல சிறப்பு அம்சங்களுடன் நடத்தப்பட்ட இந்த சிறுதானிய திருவிழா உங்களுக்கு எல்லாம் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என தெரிவித்தார்.

பொது மக்கள் தங்களுடைய அன்றாட உணவில் சிறு தானியங்களை அதிகளவில் சேர்த்து கொண்டால், அது, தங்களுடைய ஆரோக்கியத்திற்கும், உடல் வலிமைக்கும் பயன் உள்ளதாக அமைவதுடன், அது சார்ந்துள்ள,  விவசாயிகள், மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருள் தயாரிப்பாளர்கள், உணவு பதப்படுத்தும் தொழில்முனைவோர், வியாபாரிகள் என சமுதாயத்தின் அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என கூறிக் கொண்டு, இப்படி ஒரு சிறப்பு மிக்க விழாவினை பெருமுயற்சி செய்து நடத்திய அரசுத் துறை செயலர்கள், உயர் அலுவலர்கள், அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற விழிப்புணர்வு கண்காட்சியினை மண்டல அளவில் நடத்த வேண்டும் , நடத்தப்படும் என்பதை தெரிவித்துக்கொண்டார்.

இவ்விழாவில் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் அரசு செயலர் வி.அருண்ராய் இ.ஆ.ப, வேளாண்மை துறை அரசு செயலர் சி. சமயமூர்த்தி இ.ஆ.ப, தொழில் ஆணையர் சிஜிதாமஸ் வைத்யன், இ.ஆ.ப, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை இயக்குநர் எஸ். நடராஜன் இ.ஆ.ப, மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், இ.ஆ.ப, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்,

Tags : Small Grain ,Madurai ,International Small Grain Year , International Year of Small Grains, Small Grains Exhibition at Madurai, Ministerial Participation
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...