மாமல்லபுரம் அருகே அரசு துணை சுகாதார நிலையம்: அமைச்சர்கள் காணொலி மூலம் திறந்து வைத்தனர்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே அரசு துணை சுகாதார நிலையத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ. அன்பரசன் ஆகியோர் காணொலி மூலம் திறந்து வைத்தனர். மாமல்லபுரம் அடுத்த காரணை கிராமத்தில் மக்கள் பயன் பெறும் வகையில் ஒரு அரசு துணை சுகாதார நிலையம் கட்டித்தர வேண்டும் என தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, பொதுப்பணித்துறை சார்பில் ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கி ஒரு அரசு துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது.  செங்கல்பட்டில் நடந்த ஒரு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ. அன்பரசன் ஆகியோர் காணொலி மூலம் அரசு துணை சுகாதார நிலையத்தை திறந்து வைத்தனர். இதையடுத்து, காரணை ஊராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்துவைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தார். கவுன்சிலர் வினோத்குமார், சுகாதார ஆய்வாளர் சந்தோஷ்குமார், குண்ணப்பட்டு ஊராட்சி தலைவர் விஜி மோகன், காரணை துணைத்தலைவர் தமிழரசி, செவிலியர்கள் ஆனந்தி, மாலதி உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக, மக்களுக்கு ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது.

Related Stories: