தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் வீரமிகுந்த போராட்டங்களில் ஒன்றாக பதிவாகியுள்ளது தோள்சீலை போராட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

நாகர்கோவில்: தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் வீரமிகுந்த போராட்டங்களில் ஒன்றாக பதிவாகியுள்ளது தோள்சீலை போராட்டம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தோள்சீலை போராட்டத்தின் 200-வது ஆண்டு நினைவு பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். பொதுக்கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அமைச்சர் மனோ தங்கராஜ், பீட்டர் அல்போன்ஸ், கே.பாலகிருஷ்ணன், திருமாவளவன் உள்ளிட்டோரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் வீரமிகுந்த போராட்டங்களில் ஒன்றாக பதிவாகியுள்ளது தோள்சீலை போராட்டம். இதுபோன்ற வீரமிகுந்த போராட்டங்களை இன்றைய இளம் தலைமுறையினருக்கு தெரியப்படுத்தவே இந்நிகழ்ச்சி. கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் தமிழ்நாடு எவ்வளவோ உயரங்களை தொட்டுவிட்டது. 80 வயதை கடந்த பெரியவர்களை கேட்டால்தான் இந்த தமிழ்ச் சமுதாயத்தில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் தெரியும்.

தமிழ்ச் சமுதாயமானது 3,000 ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டால் செழித்து இருந்ததை யாராலும் மறுக்க முடியாது. ஆடை மட்டுமின்றி அணிகலன்களையும் அணிந்து வாழ்ந்து வந்ததுதான் நமது தமிழ்ச் சமுதாயம். இடைக்காலத்தில் ஏற்பட்ட பண்பாட்டு படையெடுப்புகளால் தமிழினத்தின் பண்பாடு சிதைக்கப்பட்டுவிட்டது. மதம், சாதி, புராணம், சாஸ்திர சம்பிரதாயங்களால் பல மாற்றங்கள் நிகழ்ந்து ஆணுக்கு பெண் அடிமை என மாற்றிவிட்டனர். திருவிதாங்கூரில் பெண்கள் அனுபவித்த கொடுமைகள் வேறு எங்கும் நடைபெறாதது. தோள்சீலை போராட்டத்துக்கு அய்யா வைகுண்டர் துணையாக இருந்தார்.

இன்றைய திராவிட மாடல் ஆட்சி, உயர்கல்வி, ஆராய்ச்சி படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. நாம் எல்லோரும் முன்னேற்றம் அடைவது இவர்களுக்குப் பிடிக்கவில்லை; அதனால்தான் எதிர்க்கிறார்கள். படிக்க வரும் பெண் பிள்ளைகளுக்கு ரூ.1000 கொடுப்பதால் சிலர் பொறாமைப்பட்டு எதிர்க்கிறார்கள். சமூக அழுக்குகளை சட்டம், மன மாற்றத்தால் மாற்றி அமைக்க வேண்டும் இவ்வாறு கூறினார்.

Related Stories: