சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு பகுதியில் சென்னை -கும்பகோணம் நெடுஞ்சாலை உயரத்தை அதிகரிக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு பகுதியில் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் தாழ்வான பகுதியின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு பகுதியில் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இச்சாலையின் வழியே தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், பேருந்துகள், கனரக வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் குறுக்குரோடு பகுதியில் நான்கு முனை சந்திக்கும் சாலைக்கு வடக்கே சென்னை-கும்பகோணம் சாலையில் சிறிது தூரத்தில் தாழ்வான சாலை அமைந்துள்ளது.

வாய்க்காலில் அதிகமாக வரும் மழைநீரை வடிகாலாக்க அப்போதைய காலகட்டத்தில் அமைக்கப்பட்டதாகும். இதேபோன்று நான்கு முனை சந்திக்கும் சாலைக்கு தெற்கேயும் சிறிது தூரத்தில் தாழ்வான சாலை அருகருகே அமைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த சாலை வாகன போக்குவரத்து அதிகம் இல்லாத காலகட்டங்களில் அமைக்கப்பட்டது. ஆனால் இப்போதைய காலகட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கையும், போக்குவரத்தும் அதிகம். இந்த சாலையின் மிக அருகே எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளதாலும், தற்போது கரும்பு அரவை பணிகள் நடைபெற்று வருவதாலும், தினந்தோறும் நூற்றுக்கணக்கான டிராக்டர்களில் கரும்பு ஏற்றிக்கொண்டு ஆலைக்கு வருகின்றன.

சாலை தாழ்வாக உள்ள இந்த பகுதிகளில் மேடு பாங்கான பகுதியில் இருந்து தாழ்வான பகுதி சாலையை வாகனங்கள் கடக்கும்போது வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் வடகிழக்கு பருவமழை காலங்களில் கனமழை காரணமாக வெள்ளாற்றில் பெருக்கெடுத்துவரும் காட்டாற்று மழை வெள்ளநீர், உபரிநீர் வடக்கு ராஜன் வாய்க்கால் வழியாக சென்று குமார உடைப்பு வாய்க்கால், 25 கண்மாய் பாலத்தின் வழியே செல்லும். கட்டுக்கடங்காமல் வாய்க்காலில் தண்ணீர் அதிகரிக்கும்போது வழிந்து மேலே குறிப்பிட்ட தாழ்வான சாலை வழியாக செல்லும்.

அப்போது சென்னை-கும்பகோணம் போக்குவரத்து துண்டிக்கப்படும். பல ஆண்டுகளாக இதுபோன்ற நிலை ஏற்பட்டு வருகின்றது. எனவே இதுபோன்ற நிலைமை மீண்டும் ஏற்படாமலிருக்க தாழ்வான சாலையின் உயரத்தை அதிகரித்து வெள்ள காலங்களில் போக்குவரத்து துண்டிக்கப்படாதவாறு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: