எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவை நினைவாக்குவோம்’ என்ற கோஷத்தை சொல்லாத அதிமுக தலைவர்களே இல்லை. ஆனால், அவர்களின் செயல்பாடு பிரதமர் மோடி, அமித்ஷா கண்ட கனவை நினைவாக்குவோம் என்ற ரீதியில்தான் உள்ளதாக அதிமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் வெளிப்படையாக பேசி கொண்டிருக்கின்றனர். ‘எப்படி இருந்த நான்... இப்படி ஆயிட்டேன்...’ - இதுதான் அதிமுகவின் இன்றைய நிலை. அதிமுக என்ற ஏணிதான் பாஜவை கொஞ்சம் கொஞ்சமாக மேலே கொண்டு வந்து கொண்டிருக்கிறது என்பதுதான் நிதர்சன உண்மை. அதே நேரத்தில் அதிமுகவின் செல்வாக்கும் சரிந்து வருகிறது.
அதிமுகவுக்கு எப்போதும் வெற்றியை தேடி தரும் ‘கொங்கு கோட்டை’ என்று நம்பிக்கையுடன் அழைக்கப்படும் கொங்கு மண்டலத்தில் இன்று மிகப்பெரிய அளவில் தன்னுடைய பலத்தை திமுக நிரூபித்துவிட்டது. சட்டப்பேரவை தேர்தல், உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல் என அனைத்திலும் அதிமுகவுக்கு தோல்வியே பரிசாக மக்கள் கொடுத்து உள்ளனர். 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிறுத்தி அரசியல் செய்து வரும் பாஜ, தன்னுடைய சுயலாபத்துக்காக அதிமுகவை பல அணிகளாக உடைத்து, அவர்கள் ஊழல் பைல்களை கையில் வைத்து மிரட்டி அரசியல் செய்து வருகிறது. பாஜ வீசிய ‘ஆபரேஷன் 24’ வலையில் சிக்கி எழ முடியாமல் மண்புழுபோல் அதிமுக தவிழ்ந்து கொண்டிருக்கிறது. அன்று வீடு தேடி வந்த பாஜ தலைவர்களை வாசலில் நிற்க வைத்தவர் ஜெயலலிதா.
இன்று வீடு தேடி செல்லும் அதிமுக தலைவர்களை காக்க வைக்கிறது பாஜ. வாழ்க்கை ஒரு வட்டம் என்று சொல்வார்களே.. அது, இதுதானோ. பாஜவால் அதிமுக செல்வாக்கை இழந்தது மட்டுமில்லாமல் சுயமரியாதை என அனைத்தையும் பறிகொடுத்துவிட்டு நிர்கதியாக உள்ளது. அதிமுக பிளவுக்கு பின்பு ஒற்றை தலைமை என்ற பிரச்னை எழுந்தது. இதில், ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே எழுந்த மோதல் போக்கு உச்சத்தை அடைந்த நிலையில் அதிமுக தற்போது எடப்பாடி பழனிசாமியின் கைக்கு சென்று விட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பும் அவருக்கு சாதகமாக அமைந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கணிசமான வாக்குகளை அதிமுக வேட்பாளர் பெற்று எடப்பாடி பழனிசாமி தனது செல்வாக்கை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுக வேட்பாளர் படுதோல்வியை சந்தித்ததன் மூலம், அதிமுக தொண்டர்களின் நிலைபாடு என்பது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுகவில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சில மூத்த நிர்வாகிகள் போர்க்ெகாடி தூக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால், இந்த தேர்தலில் கிட்டத்தட்ட எடப்பாடி பழனிசாமிக்கு அனைத்து விஷயங்களும் சாதகமாக அமைந்திருந்தன. இருந்தும் கூட இப்படி ஒரு படுதோல்வியை சந்தித்திருப்பது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கடும் அதிர்ச்சியை தந்துள்ளது. அதிமுக வேட்பாளர் கணிசமான வெற்றியை பெற்று எடப்பாடி பழனிசாமியின் பெயரை காப்பாற்றுவார் என்று எதிர்பார்த்திருந்தனர். இதற்காக களத்தில் இறங்கி பல கோடிகளையும் அதிமுகவினர் செலவழித்ததாக கூறப்படுகிறது. பரிசு பொருட்கள் மழையாக கொட்டியது. ஆனாலும் இப்படிப்பட்ட தோல்வி என்பது அதிமுக வரலாற்றில் கரும்புள்ளியை தந்துவிட்டதாகவே அதிமுகவினர் கருதுகின்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக அமைந்த விஷயங்கள் அனைத்தும் எதிராக இருந்திருந்தால் நினைத்து பார்க்க முடியாத தோல்வியை அதிமுக வேட்பாளர் சந்தித்திருப்பார் என்பது அதிமுகவினரின் புலம்பலாக உள்ளது. அதிமுகவின் கோட்டை என்றெல்லாம் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பெருமிதப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், இந்த படு தோல்வியானது எடப்பாடியின் ஆளுமையை கேள்வி கேட்க வைப்பதாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி தனியாக ஒற்றை தலைமையில் இருந்து வெற்றி பெற முடியவில்லை என்ற வாதமும் நிரூபனமாகிறது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுகவில் முக்கிய நிர்வாகிகள் பலர் போர்க்கொடி தூக்கி வருவதாக கூறப்படுகிறது. ஒற்றை தலைமையின் கீழ் எடப்பாடி பழனிசாமியால் சாதிக்க முடியவில்லை என்றும், ஒன்றுபட்ட அதிமுக இருந்தால் இந்த அளவுக்கு படுதோல்வியை சந்தித்திருக்க மாட்டோம் என்றும் பேச தொடங்கி விட்டனராம்.இதனால், எடப்பாடி பழனிசாமிக்கு கட்சிக்குள் பெரிய அளவில் எதிர்ப்பை உருவாக்கி தந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் தேர்தல்களில் அதிமுக தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருவதாக அதிமுக மூத்த நிர்வாகிகள் புலம்புகின்றனராம். அதாவது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், மக்களவை தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல், 9 மாவட்ட ஊராட்சி மன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2022ல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், ஈரோடு இடைத் தேர்தல் என தொடர்ந்து 7 தேர்தல்களில் தோல்வியை தழுவியுள்ளனர். ஒற்றைத் தலைமையின் கீழ் அதிமுக பெரிய அளவில் வளர்ச்சி பெறும் என கூறி, கட்சியை பிளவுபடுத்தி எடப்பாடி பழனிசாமி, தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தும் எந்தவித முன்னேற்றமும் இல்லாதது அவர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது. தேர்தல்களில் தொடர் தோல்வியை மட்டுமல்ல, அதிமுகவை அழிவின் பாதைக்கு அழைத்து சென்று விடுவார் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொந்தளிக்க தொடங்கியுள்ளனர். இந்த தேர்தலில் அதிமுக மிகப் பெரிய சரிவை சந்தித்து உள்ளது. எடப்பாடியின் கோட்டை என்று மார்தட்டி பேசிய கொங்கிலேயே அவர் படு தோல்வியை சந்தித்துள்ளார். ஒற்றை தலைமை எடுபடவில்லை என்று வாதம் தற்போது கட்சிக்குள் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி இனியேனும் இறங்கி வந்தால் தான் அதிமுகவை காப்பாற்ற முடியும் என்ற கோஷத்தை ஓபிஎஸ் தரப்பினர் எழுப்ப தொடங்கியுள்ளனர்.இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கூறுகையில், ‘‘எடப்பாடி பழனிசாமிக்கு சின்னம் கிடைத்தும் அவர் தரப்பு வெற்றி பெறவில்லை, அவர் தனியாக தலைவராக இருக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் தனியாக இருந்தும் கூட அவர் எதிர்பார்த்த வாக்குகள் கிடைக்கவில்லை. படுதோல்வியை சந்தித்துள்ளனர். இந்த தோல்வியை மனதில் கொண்டு, அவர் இனிமேலாவது இறங்கி வர வேண்டும். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வாக்குகள் சிதறாமல் ஒன்றாக இருக்கும். மீண்டும் கூட்டு தலைமையின் கீழ் அதிமுகவை ஒன்று சேர்த்தால் மட்டுமே வரும் தேர்தல்களில் அதிமுகவுக்கு வெற்றி கிடைக்கும்’’ என்றனர். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதைதான் ஓபிஎஸ், இபிஎஸ்சின் தற்போதைய நிலை. எல்லாம் பாஜ பார்த்து கொள்வார்கள் என அவர்கள் சொல்வதற்காக தலையாட்டி பொம்மைபோல் செயல்பட்ட இபிஎஸ், ஓபிஎஸ் அணிக்கு அசிங்கமும், அவமானமும், கட்சிக்குள் எதிர்ப்பு மட்டுமே கிடைத்து உள்ளது. எனவே, கட்சியை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் பாஜவுக்கு எதிரான ராஜதந்திர அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று தொண்டர்கள் வலியுறுத்தி உள்ளனர்.* அசிங்கப்படுத்தினாலும் அதிமுகவை விடாமல் பிடித்து கொள்ளும் பாஜஜனநாயகத்தை கேலிக்கூத்தாகி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை விலை வாங்கி பல மாநிலங்களில் ‘ஆபரேஷன் தாமரை’ மூலம் ஆட்சியை பிடித்த பாஜ, தமிழ்நாட்டில் அதிமுக என்ற ஏணி மூலம் சவாரி செய்து வருகிறது. அதிமுக தயவால் மக்கள் பிரதிநிதிகளை பெற்றுள்ள பாஜ, தங்கள் செல்வாக்கால் வென்றதுபோல், பிம்பத்தை உருவாக்கி வருகிறது. அமைதி பூங்காவாக உள்ள தமிழ்நாட்டில் மத அரசியல், பிரிவினைவாதம் போன்ற மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் அரசியலை கையில் எடுத்து உள்ளது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதால் அவர்கள் பாஜ மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இதை போக்க அதிமுக என்ற குதிரை அவர்களுக்கு தேவைப்படுகிறது. அதில் சவாரி செய்து மக்கள் மனங்களை வெல்லலாம் என்று திட்டம் போட்டனர். ஆனால் அதிமுகவினரே, ‘நீங்கள் தயவு செய்து சிறுபான்மை பகுதியினருக்கு வராதீர்கள். நீங்கள் வந்தால் கிடைக்கும் ஓட்டு கூட கிடைக்காது’ என்று கூறினர். மேலும், பாஜ கொடியை பயன்படுத்தவும் தயங்கினர். அண்ணாமலையுடன் சேர்ந்தும் இபிஎஸ் பிரசாரம் செய்யவில்லை. இந்த காட்சிகள் ஈரோடு இடைத்தேர்தலில் நடந்தது. ‘எங்களால்தான் பாஜ வளர்கிறது’ என்று முகத்தில் கரியை பூசி அசிங்கப்படுத்தினாலும், 2024 வரை ஓட அதிமுக என்ற குதிரை வேண்டும் என்பதால் எவ்வளவு அடித்தாலும் தாங்கி கொள்கிறார்கள். மற்ற கட்சிகளை தனித்து போட்டியிட தைரியம் இருக்கிறதா என்று கேட்கும் அண்ணாமலைக்கு, தமிழ்நாட்டில் தனித்து போட்டியிட தைரியம் இல்லை. ஏன், ஈரோடு இடைத்தேர்தலில் பாஜ போட்டியிட்டு இருந்தால், தற்போது அதிமுக கண்ட படுதோல்வியை விட இன்னும் மோசமாக தோல்வியடைந்து இருப்பார்கள். இதற்கு பயந்தே பாஜ போட்டியிடவில்லை. ஆனால் அண்ணாமலையோ ரொம்ப புத்திசாலித்தனமாக பேட்டி கொடுப்பதுபோல், ‘இது எங்களுக்கான தேர்தல் இல்லை. நாடாளுமன்ற தேர்தல்தான் எங்களுக்கான தேர்தல்’ என்று தெரிவித்து உள்ளார்.* தோல்விக்கு யார் பொறுப்பு?..அண்ணாமலை-இபிஎஸ் மோதல்இந்த தேர்தல் முடிவு அதிமுக, பாஜவின் செல்வாக்கை நிரூபிக்கும் தேர்தலாக அமைந்திருந்தது. குறிப்பாக, எடப்பாடி மற்றும் ஓபிஎஸ்சின் எதிர்கால அரசியலை தீர்மானிக்கும் தேர்தலாக அமைந்திருந்தது. வேட்பாளர், பிரசாரம் என பல்வேறு விவகாரங்களில் இபிஎஸ், ஓபிஎஸ் இடையே நீயா? நானா? போட்டி, பாஜவின் தலையீடு என பல்வேறு குழப்பங்களுக்கு இடையே அதிமுக இந்த தேர்தலை சந்தித்தது. ஆனால், படுதோல்வியே அதிமுகவுக்கு பரிசாக மக்கள் தந்தனர். இதனால், ஓபிஎஸ் அணியினர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஒவ்வொரு தேர்தலுக்கு பின்பும் தோல்விக்கு யார் காரணம் என்ற சண்டை பாஜ-அதிமுக இடையே தொடர்ந்து வருகிறது. இதுதொடர்பாக, 2 கட்சிகளை சேர்ந்த மூத்த தலைவர்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தும், சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டும் மோதி கொள்வார்கள். பின்னர், தலைவர்கள் கூறிய கருத்து அவர்களின் தனிப்பட்ட கருத்து என்று சப்பைக்கட்டு கட்டுவார்கள். அது, இந்த தேர்தல் முடிவிலும் அரங்கேறி உள்ளது. ‘இந்த படுதோல்விக்கு எடப்பாடிதான் காரணம். நாங்கள் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை’ என அண்ணாமலை மறைமுகமாக விமர்சித்து உள்ளார். இதற்கு இபிஎஸ் அணி சார்பில் கே.பி.முனுசாமி, ‘நாங்கள் தேர்தலில்தான் தோற்று உள்ளோம். அரசியலில் வெற்றி பெற்று உள்ளோம்’ என்று தெரிவித்து உள்ளார். அரசியல் ரீதியாக பாஜவை வென்றுவிட்டோம் என்பதைதான் கே.பி.முனுசாமி தெரிவித்து உள்ளதாக இபிஎஸ் அணி மூத்த தலைவர்கள் தெரிவித்து உள்ளனர்.