பெரம்பூர் நகைக்கடையில் 9 கிலோ தங்கம் கொள்ளை வழக்கு: பெங்களூருவில் 2 பேர் கைது.! நகைகளை பங்கு பிரிக்கும் சண்டையால் சிக்கினர்

சென்னை: பெரம்பூர் நகைக்கடையில் 9 கிலோ தங்கம் கொள்ளை வழக்கில் பெங்களூருவில் இரண்டு பேரை கைது செய்து, சென்னைக்கு அழைத்துவந்துள்ளனர். கொள்ளையடித்த நகைகளை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட சண்டையில் போலீசார் பிடியில் சிக்கியுள்ளனர். சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள ஜெ.எல். நகைக்கடையில் கடந்த மாதம் 10ம் தேதி வெல்டிங் மெஷினால் ஷட்டரில் ஓட்டைப்போட்டு 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை கொள்ளையடித்து தப்பினர். அப்போது நகைக்கடையில் உள்ள டி.வி.ஆர் கருவிகளையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்று விட்டனர். இதுதொடர்பாக நகைக்கடையின் உரிமையாளர் ஜெயசந்திரனின் மகன் தர் கொடுத்த புகாரின்படி, திருவிக. நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். கொள்ளையர்களை பிடிக்க 3 உதவி ஆணையர்கள் தலைமையில் 6 தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில், கொள்ளையர்கள் பயன்படுத்திய கார் சிசிடிவி மூலம் அடையாளம் காணப்பட்டு அந்த காரின் பதிவெண் போலி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தநிலையில், தனிப்படை போலீசார் ஆந்திர மாநிலத்தில் பல நாட்கள் தங்கியிருந்து விசாரணை மேற்கொண்ட நிலையில்  கர்நாடகா மாநிலத்திலும் தீவிர விசாரணை நடத்தினர். கொள்ளையர்கள் பயன்படுத்தியதாக சந்தேகப்படும் ஒரு செல்போன் எண்ணை வைத்து கொள்ளையர்களை கண்டுபிடிக்கும் பணியிலும் ஈடுபட்டனர். இதன்படி கர்நாடகா மாநிலத்தில் சந்தேகப்படும்படி இரண்டு நபர்களை பிடித்து அவர்களை சென்னைக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கோலார் மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுநாதன் (27), உமா மகேஸ்வரன் என்கின்ற சிவா (30) என தெரியவந்துள்ளது. இவர்கள் இரண்டு பேரும் கடந்த 2022ம் ஆண்டு ஆந்திர மாநிலம் விஜயலாபுரம் பகுதியில் உள்ள வங்கியின் ஷட்டரை பெரம்பூர் நகைக்கடையில் அறுத்தது போன்று அறுத்து திருட முயற்சி செய்ததும் அந்த சமயத்தில் வங்கியின் அலாரம்  ஒலித்ததால் போலீசார் வந்து இவர்கள் இரண்டு பேர் உள்பட 9 பேரை கைது செய்தனர்.

ஆந்திராவில் வங்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அதே முறையில் பெரம்பூர் நகைக்கடையிலும் கொள்ளை நடந்துள்ளதால் சந்தேகம் அடைந்து தனிப்படை போலீசார் இரண்டு பேரிடமும் தீவிர விசாரணை செய்ததில் இவர்களுக்கு பெரம்பூர் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தொடர்பில்லை என்பது தெரியவந்தது. இதனிடையே தனிப்படை போலீசார், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக தேடிவந்த நிலையில், மங்கி குல்லா அணிந்து திருடன் செல்லும் சிசிடிவி கேமரா பதிவுகளும், திருத்தணி அருகே காரில் இருந்து இறங்கி டிபன் வாங்கிக் கொண்டு செல்லும் இருவரின் புகைப்படங்களும் சமீபத்தில் வெளியானது. இதன்படி, தனிப்படையை சேர்ந்த போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில், பெங்களூரூ தொட்ட புல்லாபுரா பகுதியை சேர்ந்த கஜேந்திரன் (31), திவாகர் (28) ஆகிய இருவரை பெங்களூரு மகாலட்சுமி லேஅவுட் போலீசார் கைது செய்து திருவிக.நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்களை திருவிக. நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், ‘‘பெரம்பூர் நகைக்கடை கொள்ளையில் 6 பேர் ஈடுபட்டுள்ளதாகவும் இவர்கள் அனைவரும் பெங்களூரு பகுதியில் உள்ள ஒரு அறையில் தங்கியிருந்து கொள்ளையடித்த நகைகளை பங்கு பிரிக்கும்போது தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஒரு அறையில் இரண்டு இளைஞர்கள் சண்டை போட்டுக்கொள்வதாக பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் போலீசாருக்கு தகவல் கிடைத்ததால் அவர்கள் சென்று அங்கிருந்த கங்காதரன், ஸ்டீபன் ஆகியோரை கைது செய்துள்ளனர். இவர்கள் கொடுத்த தகவலின்படி, தற்போது கஜேந்திரன், திவாகர் ஆகியோரை கைது செய்துள்ளனர். இவர்களிடம் துருவித் துருவி விசாரணை செய்தபோது பெரம்பூரில் நகைக்கடையில் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 2 1/2 கிலோ தங்க நகைகளை பெங்களூரு மகாலட்சுமி லேஅவுட் போலீசார் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவ்வழக்கில் அருண், கவுதம் ஆகிய இருவர் தலைமறைவாக உள்ளதாகவும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள கஜேந்திரன், திவாகர் ஆகியோரிடம் விசாரணை நடத்தும் பட்சத்தில் பல உண்மைகள் வெளிவரும் எனவும் கங்காதரன், ஸ்டீபன் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டி உள்ளதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories: