மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு 2 நாள் சிபிஐ காவல்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 2 நாள் சிபிஐ காவல் விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். கல்வி உட்பட 18 இலாகாக்களை தன் வசம் வைத்திருந்த சிசோடியா, தன் மீதான நடவடிக்கையை தொடர்ந்து அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார். கைது நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்தது. தொடர்ந்து, டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் சிபிஐ காவலில் உள்ள மணிஷ் சிசோடியா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கில் அனைத்து மீட்டெடுப்புகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதால், அவரை காவலில் வைத்திருப்பது எந்தப் பலனையும் அளிக்காது என்று மணிஷ் சிசோடியா தனது ஜாமீன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே 5 நாள் காவலில் மணீஷ் சிசோடியா விசாரிக்கப்பட்ட நிலையில் மேலும் 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 3 நாள் காவலில் விசாரிக்க சிபிஐ  அனுமதி கேட்ட நிலையில் 2 நாள் காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மணீஷ் சிசோடியா ஜாமின் கோரிய மனுவை மார்ச் 10ம் தேதிக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Related Stories: