முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து அரசு பள்ளியில் திடீர் ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

நாமக்கல்: முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். நாமக்கல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட அழகுநகர் பகுதியில் இயங்கி வரும் நகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, நகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளிடம் உணவு சுவையாக மற்றும் தரமாக உள்ளதா என கேட்டறிந்தார்.

மேலும், காலை எத்தனை மணிக்கு உணவுகள் வழங்கப்படுகிறது எனவும், எத்தனை மாணவர்கள் இதனால் பயனடைகிறார்கள் என்பது குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் அப்பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவினை மாணவர்களுடன் அமர்ந்து கலந்துரையாடிக் கொண்டே உணவருந்தினார். தொடர்ந்து, அந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் கற்றல், கற்பித்தல் முறை, அளிக்கப்படும் பயிற்சிகள், அதற்கான அட்டவணைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

மேலும், அந்தப்பள்ளியில் உள்ள கழிவறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, சுகாதாரமான முறையில் பராமரித்திட ஆசிரியர்களிடம் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வில் வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இராஜேஸ்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஸ்ரேயா பி.சிங் இ.ஆ.ப., ஆகியோர் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: