எடப்பாடிக்கு கேவலமான தோல்வி: புகழேந்தி தாக்கு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்  வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற ஐஆர்டிடி கல்லூரிக்கு அருகில் உள்ள லட்சுமி நகரில் நேற்று ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி அளித்த பேட்டி: அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், இரட்டை இலை சின்னம், கொங்கு மண்டலம் எனக் கூறியும்,  முன்னாள் அமைச்சர்கள் களத்தில் இருந்தும் அதிமுக அவமானகரமான, மிகப்பெரிய கேவலமான தோல்வியை அடைந்துள்ளது. இதிலிருந்து, எடப்பாடி பழனிசாமியை ஏற்க மக்கள் தயாராக இல்லை என்பது தெரிகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் 90 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருக்க வேண்டும். ஆனால், 75 சதவீதம் மட்டுமே பதிவானது. 15 சதவீதம் அதிமுக வாக்காளர்கள் வாக்களிக்க வரவில்லை. ஈரோடு கிழக்கு தேர்தல் வெற்றி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் பரிசாக அமைந்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது தூங்கும் வேட்பாளரை வைத்து அதிமுக வெற்றி பெற முடியாது. இப்போதும் காலம் கடந்து விடவில்லை. எடப்பாடி பழனிசாமி கடந்த காலத்தில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு, ஓபிஎஸ் தலைமையை ஏற்று, ஒற்றுமையுடன் இணைந்து பயணிக்க வேண்டும். ஓபிஎஸ் இல்லாமல் அதிமுகவுக்கு வெற்றி கிடையாது. சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவி பெற்றது போன்று, எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்சிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இரட்டை இலை துரோகிகளின் கைகளில் சிக்கிக் கொண்டுள்ளது. அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மிகவும் துவண்டு போய் உள்ளனர். கடந்த தேர்தலின்போது 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தமாகா தோற்றது. தற்போது 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோல்வியடைகிறது.இதே நிலை தொடர்ந்தால் நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுக மாபெரும் தோல்வியடையும். அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் கிளர்ந்து எழுந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும். ஊழல் செய்த அதிமுகவினரை கைது செய்ய வேண்டும். கொலை, கொள்ளை அடித்தவர்களை கைது செய்து தெருவில் இழுத்துச் செல்ல வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்தி சிறையில் அடைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகழேந்தி தெரிவித்தார்.

Related Stories: