ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் எதிரொலி மக்கள் மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு: சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட தென்னரசுக்கு ``இரட்டை இலை’’ சின்னத்தில் வாக்களித்த மக்கள் அனைவருக்கும், நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஜனநாயக முறைப்படி இந்த இடைத்தேர்தல் நடைபெற்றிருந்தால் அதிமுக மகத்தான வெற்றி பெற்றிருக்கும். ஆனால், பணநாயகத்தின் மூலமாக காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைத்துள்ளனர். தேர்தல் நாளன்று வாக்குப்பதிவிலும் தொடர் முறைகேடுகள் அரங்கேற்றப்பட்டன. பல வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க பொத்தானை அழுத்தியபொழுது, கை சின்னத்திற்கு நேரே இருக்கும் விளக்கு ஒளிர்ந்து வாக்கு பதிவானது அதிர்ச்சி அளித்தது.

இத்தனை நடந்தும், அதிமுகவிற்கு வாக்களித்து, மாற்றத்திற்கு அச்சாரமிட்டிருக்கும் வாக்காளர்கள் ஒவ்வொருவரும் போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் உரியவர்கள். ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல், பொய் பிரச்சாரத்தால் குழம்பி போகாமல், அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல், ஜனநாயகம் காக்கும் போராட்டத்தில், அதிமுகவின் கரங்களை வலுப்படுத்தியுள்ள மக்கள் அனைவருக்கும் எனது பேரன்பையும், வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தல் களத்தில் அதிமுகவிற்கு தோளோடு தோள் நின்று ஆதரவளித்து பணியாற்றிய கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மற்றும் நல்லாதரவு வழங்கிய அமைப்புகள், சங்கங்கள், பேரவைகள் ஆகியவற்றின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றி. குறிப்பாக ஈரோடு (கிழக்கு) தொகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், அடிமட்ட தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.தேர்தல் நேரத்தில் ஈரோடு தொகுதி மக்களை பாராட்டி பேசியதோடு, தனது சாதியைச் சொல்லி கடிதம் எழுதி ஓட்டுக் கேட்ட எடப்பாடி பழனிசாமி, தற்போது பண நாயகம் மூலம் வெற்றி பெற்றனர் என்று வாக்களித்த மக்களை குற்றம்சாட்டியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories: