நத்தாநல்லூர் ஊராட்சியில் குண்டும் குழியுமான கிராம சாலை: சீரமைக்க வலியுறுத்தல்

வாலாஜாபாத்: நத்தாநல்லூர் ஊராட்சியில் மதுராநல்லூர் கிராம சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்து, வாகன போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த சாலையை உடனடியாக சீரமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட நத்தாநல்லூர் ஊராட்சியில் அடங்கிய மதுராநல்லூர் கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.  இங்கு நியாயவிலை கடை, ஆரம்பப்பள்ளி உள்பட அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இக்கிராமம், வாலாஜாபாத்-தாம்பரம் செல்லும் சாலையில் இருந்து சுமார் 2 கிமீ தூரத்தில் உள்ளது. எனினும், இக்கிராமத்தின் பிரதான சாலை கடந்த சில ஆண்டுகளாக முறையான பராமரிப்பின்றி, தற்போது குண்டும் குழியுமாக சேதமாகி, வாகன போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த பிரதான சாலையின் வழியே நாள்தோறும் வாலாஜாபாத், காஞ்சிபுரம், ஒரகடம், பெரும்புதூர், சுங்குவார்சத்திரம் உள்பட பல்வேறு நகர் பகுதிகளில் இப்பகுதி மக்கள் பல்வேறு பணிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்த சாலை கோடை காலத்தில் குண்டும் குழியுமாகவும், மழைக் காலத்தில் சேறும் சகதியுமாக மாறிவிடுவதால், சுமார் 10 கிமீ தூரத்துக்கு மேல் இக்கிராம மக்கள் வாகனங்களில் சுற்றிவர வேண்டிய அவலநிலை நீடித்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை சாலையை சீரமைப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே, மதுராநல்லூர் கிராம மக்களின் பயன்பாட்டில் உள்ள பிரதான சாலையை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, அந்த சாலையை உடனடியாக சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: