முதலமைச்சர் கோப்பை அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி-எஸ்பி சிவக்குமார் துவக்கி வைத்தார்

சேலம் : தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில், சேலம் மாவட்ட அரசு ஊழியர்களுக்கான போட்டிகள் நேற்று நடந்தது.சேலம் மாவட்டத்தில் 2022-23ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய ஐந்து பிரிவுகளில் நடத்தப்பட்டு வருகிறது. ஆண், பெண் இருபாலருக்கும் மாவட்ட அளவில் 43 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என 51 வகையான போட்டிகள் நடக்கிறது.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க 41,481 பேர் பதிவு செய்தனர். இது தமிழ்நாட்டிலேயே முதலிடமாகும். இதனால், தொடர்ந்து அந்தந்த பிரிவுகள் வாரியாக போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், அரசு ஊழியர்களுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நேற்று காலை, மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. மாவட்ட எஸ்பி சிவக்குமார் கலந்துகொண்டு, துவக்கி வைத்தார். இதில் முதலில் பெண் ஊழியர்களுக்கான ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தடகளம், வாலிபால், கபடி, செஸ் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், தனிநபர் பிரிவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ₹3,000,  இரண்டாம் பரிசு ₹2,000, மூன்றாம் பரிசு ₹1,000 எனவும், இரட்டையர் பிரிவிற்கு முறையே ₹6,000, ₹4,000, ₹2,000 எனவும், குழுப்போட்டிகளுக்கு குழு எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் தலா ₹3,000, ₹2,000, ₹1,000 வழங்கப்படவுள்ளது.

மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் தனிநபர்களுக்கு முதல் பரிசு தலா ₹1,00,000, இரண்டாம் பரிசு தலா ₹75,000, மூன்றாம் பரிசு தலா ₹50,000 வழங்கப்பட இருக்கிறது. மேலும், குழுப்போட்டிகளில் வெற்றி பெறும் ஒவ்வொரு குழு உறுப்பினர்களுக்கும் தனித்தனியாக பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகன்நாதன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: