ஒடுகத்தூர் அடுத்த கரடிகுடி பகுதியில் கொடி கட்டி பறக்கும் சாராய பாக்கெட்டுகள் விற்பனை-விவசாய நிலங்களை சேதப்படுத்தும் குடிமகன்கள்

ஒடுகத்தூர் :  ஒடுகத்தூர் அடுத்த கரடிகுடி மற்றும் குச்சிபாளையம் ஆகிய கிராமங்களுக்கு இடையே தீபாபாத் பகுதி உள்ளது. இப்பகுதியில், நிலக்கடலை, கரும்பு, சோளம், கேழ்வரகு போன்றவை அதிகளவில்  விளைவிக்கப்படுகிறது. இது ஒரு புறம் என்றால் அதே விவசாய நிலங்களில் கள்ளச்சாராயம் விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது. இதற்காக நிலத்தில் தனியாக ஒரு கொட்டகை அமைத்து சாராய பாக்கெட்டுகளை ஒரு கும்பல் விற்று வருகிறது.

காலை 6 மணிக்கே இங்கு கூட்டம் அலைமோதுகிறது. இங்கு ஒரு பாக்கெட் சாராயம் ₹20க்கு விற்பனை செய்யப்படுவதால் அதனை வாங்க மூத்த குடிமகன்கள் முண்டியடித்து கொண்டு செல்கின்றனர். அதுமட்டுமின்றி, விற்பனை செய்யும் சாராயத்தை குடித்துவிட்டு  பாக்கெட்டுகளை விவசாய நிலங்களில் வீசி விட்டு செல்கின்றனர். இதனால் விவசாயிகள் கடும் வேதனை தெரிவிக்கின்றனர். அதிகாலையிலேயே சாராய வியாபாரம் தொடங்குவதால் வேலைக்கு செல்வோர் கூட இங்கு தான் குடித்து விட்டு அங்கேயே விழுந்து கிடக்கின்றனர்.

மேலும் விவசாய நிலங்களுக்கு வருபவரிடம் பிரச்னை செய்கின்றனர். இதனால் விவசாயிகள் உட்பட எத்தனையோ குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், தற்போது வளர்ந்து வரும் இளம் தலைமுறையினர் கூட இந்த பாக்கெட் சாராயத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இந்த கள்ளச்சாராயத்தில் பேட்டரி, சொட்டு மருந்து அதிகளவில் கலப்பதால் காண் பார்வை இழப்பு, நரம்பு தளர்ச்சி, வலிப்பு நோய் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக கூறுகின்றனர்.

தற்போது, கரடிகுடி சுற்றுவட்டார பகுதிகளில் எந்த ஒரு டாஸ்மாக் கடையும் இல்லாததால் இதனை பயன்படுத்தி சாராய விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

மேலும், பொதுமக்கள் இரவும், பகலும் பயணிக்கும் சாலையோரம் இந்த கள்ளச்சாராயம் கடை இருந்து வருகிறது. எனவே, இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தை சீரழித்து கொண்டிருக்கும் இந்த கள்ளச்சாராய விற்பனையை வேரோடு களையெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மலையில் இருந்து கள்ளச்சாராயம் சப்ளை

ஒடுகத்தூர் அடுத்த கரடிகுடி அருகே உள்ள பகுதிகளில் அதிகளவில் கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வருகிறது. இங்கு விற்கப்படும் சாராயமானது அல்லேரி மலையில் இருந்து தான் வரதலம்பட்டு, ஓங்கபாடி, சென்றாயன்கொட்டாய் வழியாக தீபாபாத் பகுதிக்கு வந்து சேர்கிறது. இருசக்கர வாகனங்கள் மூலம் சர்வ சாதாரணமாக லாரி டியூபுகளில் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த கடத்தல் இரவு நேரங்களில் தான் அதிகம் நடக்கிறது. இதனை தடுக்க இரவு நேரங்களில் போலீசார் ரோந்து செல்ல வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: