கோயில்களுக்கு இனி யானை வாங்கக்கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கோயில்களுக்கு இனிமேல் யானைகள் வாங்கக் கூடாது என்பது குறித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர், அறநிலையத்துறை செயலர் சுற்றறிக்கை வெளியிட ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகரைச் சேர்ந்த ஷேக் முகம்மது என்பவரின் யானை லலிதாவை அவரே பராமரிக்கவும், வனத்துறை அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம் என்றும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டிருந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன் கோயில் விழா ஒன்றில் பங்கேற்ற யானை லலிதாவிற்கு உடல்நிலை பாதித்து, மயங்கி கீழே விழுந்துள்ளது. இதுகுறித்து விலங்கு நல ஆர்வலர்கள் தரப்பில் மீண்டும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து விருதுநகருக்கு நேரில் சென்று யானையை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பார்வையிட்டார்.

பின்னர் முந்தைய வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: யானைக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் இயல்பு நிலைக்கு வரும் வரை தினசரி பரிசோதித்து, தேவையான சிகிச்சையளிக்க வேண்டும். 60 வயதை அடைந்துள்ள யானை லலிதாவை எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்தக் கூடாது. ஓய்வு பெற்றதாக அறிவித்து முறையான உணவும், பராமரிப்பும் மட்டுமே இருக்க வேண்டும். தற்போதுள்ள யானை பாகனே பராமரிக்க வேண்டும். சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலர், அனைத்து கோயில்கள் மற்றும் தனியார் வளர்க்கும் யானைகளை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.

இனிவரும் காலங்களில் மத வழிபாடு சார்ந்தோ, தனிநபரோ யாருடைய பயன்பாட்டிற்கும் யானையை வாங்கக் கூடாது என்ற ஐகோர்ட்டின் முந்தைய உத்தரவை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். கோயில்கள் மற்றும் தனிநபர்களிடம் உள்ள வளர்ப்பு யானைகளை, அரசின் மறுவாழ்வு முகாம்களுக்கு மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கோயில்களிலும் இனி யானைகள் வாங்கக் கூடாது என்பது குறித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர், அறநிலையத்துறை செயலர் இணைந்து விவாதித்து ஓர் சுற்றறிக்கையை வெளியிட வேண்டும். திருச்சி எம்ஆர் பாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு முகாம் போதுமானதல்ல என்றும், திருப்பத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களே சரியாக இருக்கும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது குறித்தும் அரசு செயலர் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அதிகாரிகள் குழு யானையை ஆய்வு: விருதுநகர் முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வரும் யானை லலிதாவை, சாத்தூர் ஆர்டிஓ அனிதா, கால்நடை இணை இயக்குநர் கோவில்ராஜ், மருத்துவர்கள் கலைவாணன், சரவணன், தங்கபாண்டி, மாயக்கண்ணன் ஆகியோர் நேற்று பார்வையிட்டு உடல்நிலையை பரிசோதித்தனர்.

Related Stories: