அதிமுக பொதுக்குழு விவகாரம் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும் சட்டசபைக்கும் தொடர்பில்லை: சபாநாயகர் அப்பாவு தகவல்

களக்காடு: ‘அதிமுக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவிற்கும், சட்டமன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். அதிமுக விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக ஜூலை மாதம் 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனைதொடர்ந்து அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளதால் அவரை எதிர்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று நெல்லை மாவட்டம், களக்காடு பச்சையாறு அணை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறுகையில், ‘அதிமுக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கும், சட்டமன்றத்திற்கும் எந்த பிரச்னையும் இல்லை. நீதிமன்ற தீர்ப்பின்படி சட்டமன்றம் செயல்படுவதில்லை. சட்டமன்றம் தனித்துவம் வாய்ந்தது. சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு சபாநாயகர்தான் முழு பொறுப்பு. அந்த வகையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், சட்டமன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்று தெரிவித்தார்.

Related Stories: