கல்லூரி பேருந்து மீது தனியார் பஸ் மோதல்: திருத்தணி அருகே 25 மாணவிகள் காயம்

திருத்தணி: திருத்தணி அருகே இன்று காலை சாலையில் நின்றிருந்த தனியார் கல்லூரி பேருந்துமீது பின்னால் வந்த மற்றொரு தனியார் பேருந்து வேகமாக மோதியது. இதில், தனியார் பெண்கள் கல்லூரியை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட மாணவிகள் காயமடைந்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். திருத்தணி அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு தனியார் மகளிர் கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரிக்கு நாள்தோறும் திருத்தணி, அரக்கோணம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவிகள் கல்லூரி மற்றும் அரசு பேருந்து உள்பட பல்வேறு வாடகை வாகனங்கள் மூலம் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை அரக்கோணத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட மாணவிகளை ஏற்றிக்கொண்டு திருத்தணி நோக்கி வந்து கொண்டிருந்தது. திருத்தணி சாலையில் நின்றிருந்த மாணவி ஏற்றி செல்வதற்காக தனியார் கல்லூரி பேருந்து சாலையில் நிறுத்தப்பட்டது. அச்சமயத்தில், அரக்கோணத்தில் இருந்து திருத்தணி நோக்கி வேகமாக தனியார் பயணிகள் பேருந்து, சாலையில் நின்றிருந்த கல்லூரி பேருந்தின் பின்பக்கத்தில் வேகமாக மோதியது. இதில், கல்லூரி பேருந்தில் இருந்த கிளீனர் கோவிந்தராஜ், மாணவிகள் சங்கீதா, மோனிஷா, திவ்யா, ரேஷ்மா, ஹேமா, பிரியா உள்பட 25க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

மேலும், தனியார் பேருந்தில் இருந்த 5க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு விபத்தில் காயமடைந்த மாணவிகளை கல்லூரி தாளாளர் பாலாஜி, முதல்வர் வேதநாயகி உள்பட பலர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இப்புகாரின்பேரில் திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான 2 டிரைவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் இன்று காலை பரபரப்பு நிலவியது.

Related Stories: