சின்னாளபட்டி பிரிவில் சேதமடைந்துள்ள சலவை துறையை புதுப்பித்து தர வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

சின்னாளபட்டி : சின்னாளபட்டி பிரிவில் சேதமடைந்த நிலையில் உள்ள சலவை துறையை புதுப்பித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சின்னாளபட்டி பிரிவில் திமுக ஆட்சியின் போது 1972ம் ஆண்டு வண்ணார் சமுதாய மக்களுக்காக துணிகளை ஊற வைப்பதற்கும், துவைப்பதற்கும், பட்டியல் கல்லுடன்சலவை துறை கட்டி கொடுக்கப்பட்டது. மேலும் இங்கு வெள்ளாவி வைத்து தேய்ப்பதற்கு தேய்ப்பு கூடமும் அமைத்து கொடுக்கப்பட்டது.

இச்சமுதாய மக்கள் அருகில் உள்ள ராணிமங்கம்மாள் குளத்து நீரை எடுத்து துணிகளை துவைக்க பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் குளத்தில் தண்ணீர் இல்லாமல் போகவே ஆள்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுத்து தற்போது துணிகளை துவைத்து வருகின்றனர். இந்த சலவை துறையை சின்னாளபட்டி, சாமியார்பட்டி, அம்பாத்துரை, ஜெ.புதுக்கோட்டை, செட்டியபட்டி மற்றும் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த இச்சமுதாய மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அதிமுக ஆட்சியின் போது சலவை துறையை அருகில் உள்ளவர்கள் ஆக்கிரமிக்க துவங்கினர். இதுதவிர ராணி மங்கம்மாள் குளத்தில் அருகில் உள்ள வீடுகள், ஓட்டல்கள், டீ கடைகளின் கழிவுநீர்கள் கலப்பதால் நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதோடு மழை பெய்யும் போது குளத்து தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சலவை துறை கட்டிடமும் இடிந்த நிலையில் உள்ளது.எனவே 3 ஆயிரம் வண்ணார் சமுதாய மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் சலவை துறையையும், தேய்ப்பு கூடத்தையும் புதுப்பித்து தருவதுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தின் கழிவுநீர் கலப்பதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, சின்னாளபட்டி பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சாமியார்பட்டியை சேர்ந்த பாண்டி கூறுகையில், ‘திமுக ஆட்சியின் போது 1972ம் ஆண்டு எங்களுக்கு சலவை துறை கட்டி கொடுத்தனர். அதன்பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் இக்கட்டிடத்தை ஒருமுறை கூட சீரமைத்து கொடுக்கவில்லை. மேலும் அருகில் உள்ளவர்கள் சலவை துறையை ஆக்கிரமித்து வருகிறார்கள். இதனால் இரவு நேரங்களில் துவைத்த

துணிகளை தேய்ப்பு கூடத்தில் பாதுகாப்பாக வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை காக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தகுந்த நடவடிக்கை எடுத்து சலவை துறை கட்டிடத்தை புதுப்பித்து தருவதுடன், சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

தமிழ்நாடு வண்ணார் சமுதாய எழுச்சி நலப்பேரவை மாநில செயலாளர் சண்முகவேல் கூறுகையில், ‘வண்ணார் சலவை துறையில் வைக்கப்படும் துணிகள் இரவு நேரத்தில் திருடப்படுகிறது.

முறையான மின்விளக்கு வசதி கிடையாது. இடிந்த நிலையில் இருக்கும் சலவை துறையையும், தேய்ப்பு கூடத்தையும் சீர்படுத்தி, அனைத்து வசதிகளும் செய்து ெகாடுக்க ஊரக வளர்ச்சி துறை

அமைச்சர் ஐ.பெரியசாமி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்’ என்றார்.

Related Stories: