மகளிர் டி20 உலகக்கோப்பை: 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலிய அணி!

கேப்டவுன்: மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்; இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி முன்னேறியது. கேப்டவுனில் நடந்த இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

கேப்டவுனில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து ஹீலி, மூனி ஆகியோர் களமிறங்கினர். ஹீலி 25 ரன்களும், மூனி 54 ரன்களும், கார்ட்னர் 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் லேனிங் 49 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஷிகா பாண்டே 2 விக்கெட்களையும், தீப்தி ஷர்மா, ராதா யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்திய இந்திய அணியின் தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா, யாஸ்திகா ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர்.

43 ரன்கள் எடுத்த நிலையில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் அவுட் ஆகி வெளியேறினார். அதிரடி காட்டி வந்த ஹர்மன்ப்ரீத் கவுர் 52 ரன்கள் எடுத்த நிலையில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆகி வெளியேறியதும் இந்தியாவின் இறுதிப்போட்டி கனவும் கலையத்தொடங்கியது.

இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 

Related Stories: