தஜிகிஸ்தான் நாட்டில் 6.8 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கத்தால் மக்கள் பீதி!!

காபூல்: தஜிகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் நாட்டில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  தஜிகிஸ்தான் நாட்டில் முர்கோப் எனும் பகுதியில் இன்று காலை 6 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது. தஜிகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் உஸ்பெகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தானில் உணரப்பட்டது. தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டு 20 நிமிடங்கள் கழித்து ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஃபைசாபாத்தில் இருந்து 265 கிமீ தொலைவில், நிலப்பரப்பில் இருந்து பூமிக்கடியில் 113 கிமீ ஆழத்தில் காலை 6.07 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகி உள்ளது. காலை 6.25 மணிக்கு ஃபைசாபாத் நகரில் இருந்து 259 கிமீ தொலைவில் 150கிமீ ஆழத்தில் 2ம் முறையாக ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளிகளாக பதிவாகி உள்ளது.3ம் முறையாக காலை 7.05 மணிக்கு ஃபைசாபாத் நகரில் இருந்து 279 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியது.தொடர்ந்து காலை 7.37 மணிக்கு 4வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஃபைசாபாத் நகரில் இருந்து 299 கிமீ தொலைவில் பூமிக்கடியில் 10கிமீ ஆழத்தில் பதிவான நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து மக்கள் அலறி அடித்துக் கொண்டு சாலைகளில் தஞ்சமடைந்தனர். பெரிய கட்டடங்கள் குலுங்கியதால் அங்கு பீதியான மனநிலையே காணப்பட்டது.

Related Stories: