15 ஆண்டுகளுக்கு பின் மேயர் பதவியை இழந்தது பாஜக: டெல்லி மேயர் தேர்தலில் வெற்றி வாகை சூடினார் ஆம் ஆத்மி வேட்பாளர் ஷெல்லி ஓபராய்..!!

டெல்லி: டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஷெல்லி ஓபராய் வெற்றிபெற்றார். பாஜக சார்பில் போட்டியிட்ட ரேகாகுப்தாவை தோற்கடித்து ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் வெற்றிபெற்றார். ஆம் ஆத்மி - பாஜக உறுப்பினர்களின் அமளியால் 3 முறை ஒத்திவைக்கப்பட்ட டெல்லி மேயர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்து முடிந்தது. 15 ஆண்டுகளாக பாஜக வசம் இருந்த டெல்லி மேயர் பதவி ஆம் ஆத்மி வசம் சென்றது. 10 ஆண்டுகளுக்கு பின் முதல்முதலாக பெண் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மொத்தம் 266 வாக்குகளில் ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓபராய் 150 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

டெல்லி மாநகராட்சி தேர்தல் விவரம்:

டெல்லி மாநகராட்சியில் தோ்ந்தெடுக்கப்பட்ட 250 உறுப்பினா்களில் 134 பேரை பெரும்பான்மையாகக் கொண்டதாக ஆம் ஆத்மி கட்சி கட்சியும், இதற்கு அடுத்தபடியாக 104 உறுப்பினா்களுடன் பாஜகவும், 9 உறுப்பினா்களுடன் மூன்றாமிடத்தில் காங்கிரஸும் உள்ளன. துணைநிலை ஆளுநரால் பரிந்துரைக்கப்பட்ட வல்லுநா்கள் தோ்தலில் வாக்களிப்பாா்கள் என்று தலைமை அதிகாரி கூறியதற்கு ஆம் ஆத்மி கவுன்சிலா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட குழப்பத்தை தொடா்ந்து டெல்லி மாநகராட்சி அவை கூட்டம் 3 முறை மேயரை தோ்ந்தெடுக்காமல் ஒத்திவைக்கப்பட்டது. நியமன உறுப்பினர்கள் வாக்களிப்பதற்கு எதிராக ஆம் ஆத்மி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மட்டுமே மேயர் தேர்தலில் வாக்களிக்க முடியும் எனத் தீர்ப்பு வழங்கினர்.

தேர்தல் நடத்தும் தேதி குறித்த அறிவிப்பு அடுத்த 24 மணிநேரத்தில் வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 17ம் தேதி உத்தரவிட்டனர். இதையடுத்து டெல்லி மேயர் தேர்தலுக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், இன்று மேயர் தேர்தல் நடைபெற்றது. உச்சநீதிமன்ற தலையீட்டால் டெல்லி மேயர் தேர்தலில் நடந்த இழுபறி முடிவுக்கு வந்தது நினைவுகூரத்தக்கது. தற்போது, 3 முறை ஒத்திவைக்கப்பட்டு நடந்த தேர்தலில் டெல்லி மேயராக ஷெல்லி ஓபராய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: