தெற்கு ரயில்வேயின் புதிய திட்டங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை..!!

சென்னை: தெற்கு ரயில்வேயின் புதிய திட்டங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள பொது மேலாளர் அலுவலகத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்கை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினரும், திமுகவின் தோழமை கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் சந்தித்து வருகின்றனர். திமுக நாடளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் தயாநிதிமாறன், கலாநிதி  வீராசாமி, கதிர் ஆனந்த், மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன், டாக்டர் கனிமொழி சோமு மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஷ்ணுபிரசாத், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார் ஆகியோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ரயில் போக்குவரத்தில் தமிழ்நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள், அவர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் அவர்களுக்கு தேவைப்படும் வசதிகள் ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மூத்த குடிமக்கள் நடைமேடைகளை கடப்பதற்கு உதவக்கூடிய பேட்டரி வாகனங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல், உணவு பண்டங்களின் தரத்தினை உயர்த்துதல், தங்குமிடம், கழிப்பிட வசதிகளை மேம்படுத்துதல், பயணிகள் நெரிசலை தவிர்க்க கூடுதல் ரயில்களை இயக்குதல், பறக்கும் ரயில் திட்ட பணிகள் விரிவாக்கம், கிடப்பில் உள்ள ரயில்வே மேம்பால பணிகளை நிறைவேற்றுதல், 10 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் பெரம்பூர் ரயில்வே பணிமனையின் கட்டுமான பணிகளை விரைந்து முடித்தல், பெரம்பூர் ரயில் நிலையத்தை நவீனமயமாக்குதல், சிறு சிறு ரயில் நிலையங்களில் நடைமேடைகளில் மேற்கொள்ளபட வேண்டிய வசதிகள் மற்றும் அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் உள்ளிட்டவை தொடர்பாக தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்கிடம் திமுக மற்றும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சென்னை கோட்டத்தில் புதிய வழித்தடங்களை ஏற்படுத்தவும் எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

Related Stories: