ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு பிஎப் மூலம் அதிக பென்ஷனுக்கு வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

புதுடெல்லி: பிஎப் மூலம் அதிக பென்ஷன் பெறுவதற்கான புதிய நடைமுறைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) அமைப்பு வெளியிட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பள வரம்பு ரூ.6,500ல் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தி ஒன்றிய அரசு கடந்த 2014ம் தேதி மாற்றி அமைத்தது. மேலும், ஊழியர்கள் தங்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் இருந்து 8.33 சதவீதத்தை ஓய்வூதியத்திற்கு பங்களிப்பதற்கான புதிய வசதியையும் கொண்டு வந்தது.

இதன் மூலம் ஊழியர்களுக்கு அதிகப்படியான ஓய்வூதியம் கிடைக்கும். தற்போது அதிகபட்ச பென்ஷன் சம்பளம் ரூ.15 ஆயிரமாக இருந்து வருகிறது. ஆனால், இந்த திட்டம் குறித்த தகவல் தெரியாததால், 6 மாத காலக்கெடு கொடுத்தும் அதிக அளவில் தொழிலாளர்கள் இணையவில்லை. இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ரூ.15 ஆயிரத்துக்கு மேல் ஓய்வூதிய சம்பள உச்ச வரம்பு உயர்த்தப்பட்டது உறுதி செய்யப்பட்டு கடந்த ஆண்டு நவம்பரில் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், பிஎப் மூலம் அதிக பென்ஷன் பெறும் திட்டத்தில் ஊழியர்கள் சேர 4 மாதம் அவகாசம் வழங்க உத்தரவிடப்பட்டது.

இந்த திட்டத்தில் 2014 செப்டம்பர் 1ம் தேதிக்கு முன் ஓய்வு பெற்றவர்களும், அதே தேதிக்கு முன்பாக அல்லது அதன்பிறகிலிருந்து பிஎப் திட்டத்தில் தொடரும் ஊழியர்களும் சேர முடியும். இந்நிலையில், பிஎப் மூலம் அதிக பென்ஷன் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை இபிஎப்ஓ அமைப்பு தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி, ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஊழியர்கள் அவர்களின் நிறுவனத்துடன் இணைந்து அதிக பென்ஷன் பெறுவதற்கான திட்டத்தில் சேர கூட்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தர வேண்டும். இந்த செயல்முறையை ஓய்வூதியதாரர்கள் மட்டும் ஆன்லைன் மூலமாக மேற்கொள்ள முடியும். அதிக பென்ஷன் திட்டத்தில் சேர்வதற்கான காலக்கெடு வரும் மார்ச் 3ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

Related Stories: