பேச்சுவார்த்தையில் உடன்பாடு: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கொடை விழா மற்றும் மாநாட்டுக்கான நிகழ்ச்சி நிரலில் மாற்றம் செய்ய முடிவு..!!

குமரி: கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் இந்து சமய மாநாடு நடத்துவது தொடர்பான பேச்சில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அறநிலையத்துறை, ஐந்தவ சேவா சங்கம் இணைந்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி விழா, மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நடத்திய பேச்சில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பகவதி அம்மன் கோயில் கொடை விழா மற்றும் 86வது இந்து சமய மாநாட்டை ஐந்தவ சேவா சங்கம் நடத்தும் என அறிவிக்கப்பட்டது.

ஐந்தவ சேவா சங்க அழைப்பிதழில் பாஜக, இந்து முன்னணி, விஎச்பி நிர்வாகிகள் பெயர் இடம்பெற்றதற்கு எதிர்ப்பு எழுந்தது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவை பாஜக அரசியல் ஆக்குவதாக மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின. கோயில் விழாவில் ஒரு கட்சியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பு வழுத்தத்தை அடுத்து பகவதி அம்மன் கோயில் விழா மற்றும் சமய மாநாட்டை அறநிலையத்துறையே நடத்த முடிவு செய்யப்பட்டது.

மண்டைக்காடு விழா: நிகழ்ச்சி நிரலை மாற்ற முடிவு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக நிர்வாகிகள், ஐந்தவ சேவா சங்கத்தினருடன் அமைச்சர் சேகர்பாபு பேச்சுவார்த்தை நடத்தினார். அமைச்சர் மற்றும் கன்னியாகுமரி ஆட்சியர், எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முடிவின்படி கோயில் விழா மற்றும் மாநாட்டுக்கான நிகழ்ச்சி நிரலில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அழைப்பிதழில் பாரதிய ஜனதா, இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிக்ஷித் நிர்வாகிகளின் பெயர்கள் நீக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட கட்சியை மட்டும் பிரதானப்படுத்தாமல் குமரி மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவர் பெயரையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: