அதானி குழுமத்தின் மோசடி குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கை குழு அமைக்க வேண்டும்: பிரகாஷ் கரத் வலியுறுத்தல்

சென்னை: அதானி குழுமத்தின் மோசடி குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கை குழுவை அமைத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் கரத் வலியுறுத்தினார்.

பொன்னேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் நேற்று நடந்தது. கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் கரத் கலந்துகொண்டு பேசும்போது, அதானி குழுமம் தொடர்பான பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளை ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்தி உள்ளது.

செயற்கையாக அதானி குழும பங்குகளை உயர்த்தியும், பங்குச்சந்தையில் மோசடி வேலைகள் நடந்துள்ளது. கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் நடவடிக்கைகளிலும் செயற்கையாக பங்குகளின் மதிப்பை அதிகமாக்கி சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் செபி, ரிசர்வ் வங்கி ஆகியவை தலையிடவில்லை. நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கை குழு விசாரிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்து விட்டது. சிறு முதலீட்டாளர்கள் பாதிப்புகளை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதானி குழும மோசடிகள் குறித்து விசாரணை நடத்திட உச்ச நீதிமன்றம் உத்தரவிடவில்லை.

இதற்கு முன்பாக 2 பங்குச்சந்தை மோசடிகளில் கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதானி விவகாரத்திலும் நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கை குழு விசாரணை நடத்திட வேண்டும்.

அதானி என்ற பெயரைக்கூட நாடாளுமன்றத்தில் உச்சரிக்க பிரதமர் மறுக்கிறார். இந்தி மொழி திணிப்பு குறித்த கேள்விக்கு நாடு முழுவதுமுள்ள 22 மொழிகளை தேசிய அளவிலான மொழிகளாக பட்டியலிடப்பட்டுள்ள நிலையில் அனைத்து மொழிகளையும் அரசு ஊக்கப்படுத்தி, விளம்பரப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் வாசுகி, சம்பத், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.   

Related Stories: