விவசாய நிலங்களில் பயிர்களை நாசம் செய்யும் காட்டு பன்றிகளை விரட்ட விரிஞ்சிபுரம் ஆராய்ச்சி மையத்தில் மருந்து விற்பனை

*வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்

காவேரிப்பாக்கம் : விவசாயிகளின் பயிர்களை நாசம் செய்யும் காட்டு பன்றிகளை விரட்ட விவசாய ஆராய்ச்சி மையத்தில் மருந்து விற்பனை செய்வதாக வேளாண் உதவி இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் விவசாயிகள் தற்போது நவரைப் பருவத்தில் கோ 51, 36, உள்ளிட்ட ரகங்கள் விவசாயம் செய்துள்ளனர். இதில், ஒரு சில பகுதிகளில் பயிர்கள் கதிர்கள் வெளியே வந்துள்ளன. சில பகுதிகளில் கதிர் வரும் தருவாயில் உள்ளது. இதனால் விவசாயிகள் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் கட்டளை, அய்யம்பேட்டைசேரி, மகாணிப்பட்டு, உள்ளிட்ட பகுதிகளில், இரவு நேரங்களில் காட்டுப் பன்றிகள் தாக்குதல் அதிகமாக உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். இவைகள் பயிர்களில் உருண்டு சேதம் ஏற்படுத்துவதாகவும், வேர்க்கடலை நிலங்களில் செடிகளை பிடிங்கி சேதம் ஏற்படுத்துவதாகவும் கூறுகின்றனர்.

இதனால் விவசாயிகள் பன்றியின் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க, விவசாய நிலத்தைச் சுற்றி புடவை, கோணிப்பை, பனை ஓலை, ஆகியன நட்டு வைத்துள்ளனர். இருப்பினும் பன்றியின் தாக்குதல் இரவு நேரங்களில் தொடர்ந்து வருவதாக தெரிவித்தனர்.இதுதொடர்பாக காவேரிப்பாக்கம் வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம் கூறுகையில், விவசாயிகள் காட்டுப் பன்றிகள் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க, மனித தலைமுடியை சிறிய சிறிய துண்டுகளாக  வயலின் வரப்பு ஓரங்களில் போடலாம். இதேபோல் நாட்டு பன்றி சானங்கள் கரைத்து அதனை சனல் கயிற்றில் ஊரவைத்து அதனை நிலத்தை சுற்றி கட்டலாம்.

மேலும், வேலூர் விரிஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள விவசாய ஆராய்ச்சி மையத்தில் விற்பனை செய்யும் மருந்தைக் கொண்டு வந்து, அதையும் சணல் கயிற்றை 12 மணி நேரம் ஊறவைத்து வயல் சுற்றி கட்டலாம். இதன் வாசனை தெரிந்தவுடன் பன்றிகள் ஒரு மாதத்திற்கு அந்த பக்கமே வராது என தெரிவித்தார். இதுதொடர்பாக  விவசாயிகளுக்கு அவ்வப்போது செயல் விளக்கம் அளிப்பதாகவும் கூறினார்.

Related Stories: