கொள்கையை ஒதுக்கிவிட்டு மக்களின் நலனுக்காக வரும்போது எல்லாம் நியாயம்: ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பரப்புரை

ஈரோடு: நானும், ஈவிகேஎஸ் இளங்கோவனும் பெரியாரின் பேரன்கள்தான் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி  இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  இதில்  திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்  காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது.  அக்கட்சியின் வேட்பாளராக மறைந்த திருமகன் ஈ.வெ.ராவின் தந்தையும், காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவருமான  ஈவிகேஎஸ் இளங்கோவன் களம் காண்கிறார்.  இந்த தேர்தலில்  மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

இதையடுத்து ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக இன்று கருங்கல்பாளையத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், “ஆபத்து காலத்தில் சின்னம், கட்சியை தாண்டியது தேசம் என்பதால் பரப்புரைக்கு வந்தேன். விஸ்வரூபம் படம் எடுத்தேன். அப்போது,  என்னை தடுமாற வைத்து வேடிக்கை பார்த்து சிரித்தார் ஒரு அம்மையார். கலைஞர் என்னை தொடர்பு கொண்டு ஏதாவது உதவி வேண்டுமா? என கேட்டார். இப்போது முதலமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலினும், என்ன உதவி வேண்டுமானாலும் நாங்கள் இருக்கிறோம் என்றார்.

அது என் பிரச்சனை என்பதால் நான் மறந்துவிட்டேன். இப்போது தேசத்திற்காக கூட்டணி வைத்துள்ளேன். மாற்றத்தை கொண்டு வரும் திறன் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதை சரியான நேரத்தில் நினைவூட்டுகிறேன். நான் அரசியலுக்கு வந்தது லாபத்துக்காகவோ, ஆதாயத்துக்காகவோ அல்ல, நல்லது நடக்க வேண்டும் என அறம் நோக்கி கூட்டணிக்காக வந்துள்ளேன். என் பயணத்தை பாருங்கள். எனது பாதை புரியும். கொள்கையை ஒதுக்கிவிட்டு மக்களின் நலனுக்காக வரும்போது எல்லாம் நியாயம்” என்றார்.

Related Stories: