திருமங்கலம்: திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷனில் இரட்டை அகல ரயில்பாதை அமைக்கப்பட்டு விரைவில் போக்குவரத்து துவக்கும் நிலையில் பிளாட்பாரங்களின் உயரங்கள் அதிகரிக்கும் பணிக்காக பழைய பிளாட்பாரங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மதுரை - கன்னியாகுமரி ரயில்வே மார்க்கத்தில் திருமங்கலம் முக்கிய ரயில்வே ஸ்டேஷனாக இருந்து வருகிறது. இந்த ஸ்டேஷனில் மதுரை செங்கோட்டை, பாலக்காடு திருச்செந்தூர், நாகர்கோவில் கோவை, நெல்லை ஈரோடு, மதுரை புனலூர் உள்ளிட்ட பயணிகள் ரயில்கள் அனைத்தும் நின்று செல்கின்றன. இது தவிர சென்னைக்கு செல்லும் முத்துநகர் மற்றும் கொல்லம் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி பெங்களூர் ரயில்கள் நின்று செல்கின்றன.
மொத்தம் 24 பெட்டிகள் நிற்கும் அளவிற்கு அமைந்துள்ள தண்டவாளத்தினை தற்போது நீளம் மற்றும் உயரத்தினை அதிகரிக்கும் பணிகள் திருமங்கலம் ஸ்டேஷனில் துவங்கியுள்ளன. மதுரையிலிருந்து நாகர்கோவில் வரையில் இரட்டை வழிப்பாதை விரைவில் துவங்க உள்ள நிலையில் கூடுதல் ரயில்கள் இயக்க வசதியாக திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷனில் இரண்டு பிளாட்பாரங்களும் நீளம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதில் முதல் பிளாட்பாரம் மிகவும் தாழ்வாக இருந்ததால் அவற்றை முற்றிலும் அகற்றி கற்களை எடுத்து விட்டு புதிய பிளாட்பாரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று இந்த பணி முதல் பிளாட்பாரத்தில் ஜேசிபி இயந்திர உதவியுடன் நடைபெற்றது.
பழைய பிளாட்பார கற்கள் அனைத்தும் ஜேசிபி இயந்திரம் மூலமாக தனியாக பெயர்த்து எடுக்கப்பட்டது. இதேபோல் பிளாட்பாரத்தின் நீளமும் அதிகரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே இரண்டாம் பிளாட்பாரம் உயரமாக அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதிலும் நீளம் அதிகரிக்கும் பணி நடந்து வருகிறது. இதன் மூலமாக அனைத்து ரயில் பெட்டிகள் நிற்கும் இடத்தில் பிளாட்பாரம் அமைய உள்ளதால் ரயில் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.