தேவாரம் அருகே அமர்க்களம் பல்லவராயன்பட்டி ஜல்லிக்கட்டில் பட்டையைக் கிளப்பிய காளை(யர்)கள்: வென்றவர்கள் பரிசுகளை அள்ளிச் சென்றனர்

தேவாரம்: தேவாரம் அருகே, பல்லவராயன்பட்டியில் 700 காளைகள், 350 வீரர்களுடன் நடந்த ஜல்லிக்கட்டில் 100 பேர் காயமடைந்தனர். வென்றவர்கள் பரிசுகளை அள்ளிச் சென்றனர். தேனி மாவட்டம், தேவாரம் அருகே பல்லவராயன்பட்டியில் ஏழைகாத்தம்மன் - வல்லடிக்கார சுவாமிகள் கோயில் திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. முன்னதாக வீரர்கள் தேனி கலெக்டர் ஷஜிவனா, எஸ்பி பிரவின் உமேஷ் டோங்ரே ஆகியோர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்தனர். ஜல்லிக்கட்டை கம்பம் எம்எல்ஏவும், தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான கம்பம் ராமகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில், ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன், உத்தமபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 350 மாடுபிடி வீரர்கள், 11 சுற்றுகளாக களமிறக்கப்பட்டனர். ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட 700 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. சீறி வந்த காளைகளை வீரர்கள் எதிர்கொண்டு அடக்கினர். சில காளைகள் வீரர்களுக்கு போக்குக் காட்டி சென்றன. காளைகளை அடக்கிய சிறந்த வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளிக்காசுகள், குக்கர், கட்டில், சைக்கிள், சில்வர் அண்டாக்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. அதிக காளையை அடக்கிய வீரருக்கு முதல்முறையாக கார் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடி கொடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. 100 பேர் காயம்; காளை பலி காளைகள் முட்டியதில் வீரர்கள், பார்வையாளர்கள், காளை உரிமையாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில், 3 பேர் மேல்சிகிச்சைக்காக தேனி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வாடிவாசல் பகுதியில் இரு காளைகள் முட்டிக் கொண்டதில், ஒரு காளை இறந்து விட்டது. ஜல்லிக்கட்டை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். ஜல்லிக்கட்டையொட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

Related Stories: