தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் வரும் 18ம் தேதி சிவராத்திரி விழாவை சிறப்பாக நடத்த, இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் வரும் 18ம் தேதி சிவராத்திரி விழாவை சிறப்பாக நடத்த, இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழாவானது சிவ பெருமானின் பெருமையை பறைசாற்றும் விதமாக அந்தந்த திருக்கோயில்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் ஆகம விதிகளின்படி நடைபெற்று வருகிறது. தற்போது 18.02.2023 அன்று நடைபெற உள்ள மகா சிவராத்திரி திருவிழாவினை சிறப்பாக மற்றும் வெகு விமர்சையாக நடத்திட ஏதுவாக கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றி செயல்பட சார்நிலை அலுவலர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

* துறையின் ஆளுகைக்குட்பட்ட அனைத்து சிவாலயங்களிலும் 18.02.2023 சனிக்கிழமை அன்று மாலை முதல் 19.02.2023 ஞாயிற்றுக்கிழமை காலை வரை மகா சிவராத்திரி திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு ஆடல் வல்லான் சிவ பெருமானின் அருளாற்றலையும், பெருமையையும் பறைசாற்றும் வகையிலும், சிவ வழிபாடு செய்ய வரும் பக்தர்களின் மனம் மகிழும்படியும், நமது பாரம்பரிய கலை கலாச்சார மற்றும் ஆன்மீக / சமய நிகழ்ச்சிகளை நடத்திட திருக்கோயில் நிர்வாகிகளால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

* மகா சிவராத்திரி கொண்டாடப்படும் திருக்கோயில்களில் குறிப்பாக கோபுரங்கள், மதிற்சுவர்கள் போன்றவற்றில் மின் அலங்காரங்கள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் செய்யப்படவேண்டும்.

* பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் உரிய வரிசைத்தடுப்பு வசதிகள், காவல் துறை பாதுகாப்பு, மருத்துவ முகாம்கள், கழிவறை மற்றும் சுகாதார வசதி, குடிநீர் வசதி, தேவையான இடங்களில் தீயணைப்பு துறை வாகனம் நிறுத்தம் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

* மேலும் பல்வேறு துறைகளின் அலுவலர்களை தொடர்பு கொண்டு ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி அலுவலர்களின் ஒத்துழைப்புடன் மகா சிவராத்திரி திருவிழாவினை நடத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

* மகா சிவராத்திரி விழாவில் மங்கள இசை, தேவார திருமுறை விண்ணப்பம், பக்தி சொற்பொழிவுகள், தமிழ் பக்தி இசை, நாட்டிய நாடகம், பரத நாட்டியம், வில்லிசை, கிராமிய பக்தி இசை பாடல்கள் போன்ற கலை நிகழ்ச்சிகளை, ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு குறிப்பிட்ட கால அளவு நிர்ணயம் செய்து மகா சிவராத்திரி இரவு முழுவதும் பக்தர்களும், சேவார்த்திகளும் கண்டு பயன்பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். மேற்படி நிகழ்ச்சிகள் அந்தந்த திருக்கோயிலின் நிதிவசதிக்கேற்பவும், உபயதாரர்களைக் கொண்டும் சிறப்பாக நடத்தப்பட வேண்டும்.

* மேற்படி கலை நிகழ்ச்சிகளுக்கு கலைஞர்களை தேர்வு செய்யும் பொழுது, அந்தந்த பகுதியில் உள்ள கலைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

* மகா சிவராத்திரி நிகழ்ச்சிகள் அனைத்தும் கொரோனா நோய் தொற்று குறித்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும்.

* மகா சிவராத்திரி விழாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பக்தர்கள் மற்றும் சேவார்த்திகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட வேண்டும். நிகழ்ச்சிகளை எவ்விதமான புகார்களுக்கும் இடமளிக்கா வண்ணம் நடத்திட வேண்டும்.

* பக்தர்கள் மற்றும் சேவார்த்திகள் கொண்டு வரும், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திட தனியாக இடம் ஒதுக்கப்பட வேண்டும். இது குறித்து ஒலிபெருக்கியின் மூலம் அறிவிப்பு செய்திட வேண்டும்.

* மகா சிவராத்திரி குறித்து திருக்கோயில் நிர்வாகிகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் திருவிழா முடிந்ததும் அதன் விவரத்தினையும் நாளிதழ்களில் வெளிவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இச்சுற்றறிக்கையினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து திருக்கோயில்களின் செயல் அலுவலர் / அறங்காவலர் / தக்கார் / நிர்வாகி / ஆய்வர் ஆகியோருக்கு அனுப்பி வைத்திட மண்டல இணை ஆணையர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது அறநிலையத்துறை கேட்டுக் கொண்டது.

Related Stories: